ஆடி மாதம் பெண்கள் மட்டுமே செய்யும் அவ்வை நோன்பு தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது. இது நள்ளிரவு தொடங்கி அம்மனின் கதை சொல்லி உப்பு போடாத மாவில் பல் உருவங்களைச் செய்து வணங்கி ஆண்களுக்குக் காட்டாமல் அவற்றைப் பெண்கள் மட்டுமே உண்பது வழக்கம். இதை அவ்வையார் நோன்பு என்றும் கூறுவர். அசந்தால் ஆடி, தப்பினால் தை, மறந்தால் மாசி என்ற பழமொழி இந்த மாதங்களில் மட்டும் இவ்வழிபாடு நடப்பதைக் குறிக்கின்றது.
வாராகி நவராத்திரி
மாலை நேரத்தில் பெண்கள் மட்டும் கூட்டமாகச் சேர்ந்து வழிபடும் இந்த வாராகி நவராத்திரியை சிலர் குப்த ராத்திரி என்றும் வேறு சிலர் காயத்ரி ராத்திரி என்றும் வழங்குகின்றனர். இமாசலப் பிரதேசத்தில் குஹ்ய நவராத்திரி என்பர். சாகம்பரி தேவிக்கு காய்கறி, கனி வர்க்கங்கள வைத்து வணங்க வேண்டும். தினமும் நெய் விளக்கேற்றி ஒற்றை திரி தீபம் ஏற்றி வாராகிக்குரிய சிவப்பு வண்ணத்தில் செம்பருத்தி மலர்கள் படை சிவப்பு மணி மாலை அல்லது சிவப்பு நிறத்தில் ருத்ராட்சக் கொட்டை உருட்டி ஜெபம் செய்து தச மகாவித்யா என்ற பத்து தேவிகளையும் வணங்கி வர வேண்டும். இந்த விரதத்தின் போது சைவ உணவு மட்டுமே உண்டு சாத்விக வாழ்க்கை நடத்த வேண்டும். மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்கு மற்றும் பறவைகளுக்கு அன்னதானம் செய்வது உத்தமம் ஆகும்.
குப்த நவராத்திரி
வாராகி நவராத்திரியை சில குப்த நவராத்திரி என்பர். இதுவும் ஒரு சுமங்கலி பூஜை. ரிஷ்ய சிருங்கர் என்ற முனிவ ரிடம் வந்து ஒரு சுமங்கலிப் பெண் தன் கணவர் தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதால் தனக்கும் பாவம் சேர்வதாகச் சொல்லி அழுதாள். அதற்கு அம்முனிவர் நீ குப்த நவராத்திரி விரதம் இரு உன் கணவனின் பாவம் உன்னை சேராது என்றார். அவளும் அப் படியே செய்தாள். அவள் கணவனும் காலப்போக்கில் திருந்தி விட்டான். அவளும் பாவத்தில் இருந்து விடுபட்டாள். எனவே கணவனைத் திருத்த நினைப்பவர்கள் இந்த ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியை அனுஷ்டிக்கலாம். வாராகி அல்லது குப்தா நவராத்திரியின் போது நகம் வெட்டக் கூடாது; முடி வெட்டக் கூடாது, யாரிடமும் கோபப்படுதல் ஆகாது. மது, புகை, போதையை முற்றிலும் விலக்கிவிட வேண்டும். பகலில் உறங்கக் கூடாது. கலவி கூடாது. கருப்பு உடை உடுத்தக் கூடாது. வாராகி நவராத்திரி அல்லது குப்த நவராத்திரியை ஆண்கள் கடைப்பிடித்தால் அவர்களுக்கு அதிகார பதவியை வாராகி வழங்குவாள். தீய சக்திகள் அண்டாது. பில்லி சூனியம் கிட்ட வராது. திருஷ்டி அற்றுப் போகும்.
ஆடி செவ்வாய்
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் வெள்ளி ஞாயிறு ஆகிய நாட்களில் அம்மன் வழிபாடு சிறப்பாக நடப்பதைக் காணலாம். ஆடி செவ்வாய் நாக வழிபாட்டுக்கும் புற்று வழிபாட்டுக்கும் உகந்தது. நாகரம்மன், நாகாத்தம்மன், கருமாரியம்மன் கோயில்களில் ஆடி செவ்வாய் அன்று ஆடு சேவல் பலி கொடுத்து வழிபடுவதுமுண்டு. நாகநாதர் கோயில் போன்ற பிரதிஷ்டை பெற்ற கோயில்களில் பலி கொடுக்காமல் ஆடு மற்றும் சேவல் களைக் காணிக்கையாகக் கோயிலுக்கு கொடுக்கின்றனர். கிராமங்களில் பலியிட்டு படையல் போடுகின்றனர்.
ஆடி செவ்வாய் அன்று நடைபெறும் முதல் செவ்வாய் அன்று விழா முளைப்பாரி தொடங்கு வதாக பறை சாற்றுவர். அடுத்த செவ்வாய் அன்று விதை இடுவர் இதை முத்து போடுதல் என்பர். மறு செவ்வாய் அன்று முளைப்பாரி எடுத்துக்கொண்டு போய் நீர்நிலைகளில் ஆற்றில் குளத்தில் கண்மாயில் கரைத்துவிடுவர்.
ஆடி பௌர்ணமி
ஆடி பௌர்ணமியுடன் தொடர்புடைய சில சிறப்பான நோன்புகள் விரதங்கள் இருக்கின்றன. கோகிலா விரதத்தை ஆடி பௌர்ணமியில் தொடங்கி ஆவணி பௌர்ணமியில் முடிவு செய்வர். இது ஒரு மாத விரதம் ஆகும். அடுத்து இவ்விரதத்தின் வைரவர், வராக மூர்த்தி, நரசிம்மன், மகிஷாசுர மர்த்தினி ஆகியோரை வணங்கி வர வேண்டும். கௌரி விரதம் என்பது மற்ற மாநிலங்களை விட குஜராத்தில் பெரும்பான்மையான பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும். இவ்விரதம் ஆடி மாதத்தில் சுக்ல பட்ச ஏகாதசி அன்று தொடங்கி ஐந்து நாட்கள் தொடர்ந்து ஆடி பௌர்ணமி அன்று நிறைவு பெறும்