லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்க இருக்கும் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்படுவார் என தகவல் வெளியாகயுள்ளது
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்த நிலையில் இன்று லார்ட்ஸில் நடைபெறும் போட்டி மூலம் இந்தத் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இரு அணிகளும் இருக்கின்றன. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது..
முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நாட்டிங்கம் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததாலும் பேட்டிங்கை மேலும் வலுப்படுத்தவும் இந்திய அணியில் நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் இடம் பெற்றார். இதனையடுத்து இந்திய அணி தேர்வு குறித்து கடும் விமர்சனம் எழுந்தது.
இதனையடுத்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் டெஸ்ட்டில் ஷர்துல் தாக்கூர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனையடுத்து இந்தப் போட்டியில் அஸ்வின் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் லார்ட்ஸ் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் அஸ்வின் நிச்சயம் இடம்பெறுவார் என கூறப்படுகிறது.