ஐ தமிழ்த் தாய் நேயர்களுக்கு வணக்கம்.”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் – உய்வில்லைசெய்நன்றி கொன்ற மகற்கு”-அதாவது ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்க்கு உய்வில்லை – என திருவள்ளுவர் கூறியதிருக்குறலுக்கு அர்த்தம் கற்பிக்கும் வகையில் அமைந்த தலம் இது.அத்தகைய அற்புதமான திருத்தலம் ,மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே திருப்பறியலூரில் அமைந்திருக்கிறது. இறைவன் திருப்பெயர் ஸ்ரீ வீரட்டேசுரர். இறைவி திருப்பெயர் ஸ்ரீ இளங்கொம்பனையாள்.இத்திருத்தலத்திற்கு உங்களை அழைத்துச் செல்வதில் ஐ தமிழ்த் தாய் மகிழ்ச்சி கொள்கிறது.சிவபெருமான் நிகழ்த்திய மறக்கருணைச் செயல்கள்… அதாவது தண்டனை தந்தருளும், தலங்கள் எட்டையும் ,’அட்ட வீரட்டான தலங்கள்’ என்பர். அட்டவீரட்டான தலங்கள் எவை என்பதை முதலில் அறிந்துக்கொள்வோம்.பிரம்மன் தலையைக் கண்டியூரிலும், அந்தகனைக் கோவலூரிலும், முப்புராதிகளை திருஅதிகையிலும்,தட்சனை திருப்பறியலூரிலும், சலந்தரனை விற்குடியிலும்,, யானையை வழுவூரிலும், காமனை கொற்கையிலும், எமனை திருக்கடவூரிலும் சிவபெருமான் சம்ஹாரம் செய்தார். இவையே அட்ட வீராட்டான தலங்கள் என்றழைக்கப்படுகின்றன.அதில் ஒன்றுதான் நாம் இன்று தரிசிக்கப்போகும் திருப்பறியலூர் கோயில்.”உமாதேவியை தன் மகளாகப் பெற்று, சிவபெருமானுக்கு மணம் செய்துக் கொடுத்து, அப்பெருமானை மருமகனாகப் பெற்றான் தட்சன். சிவபெருமான், தட்சன் அறியாதபடி உமாதேவியை அழைத்துச் சென்றதாலும், தட்சன் கயிலை சென்றபோது, நந்திதேவரால் தடுத்து நிறுத்தப்பெற்றதாலும், சிவபெருமானை புறக்கணித்து, ஒரு பெரிய யாகவேள்வியை நடத்த எண்ணினான் தட்சன்.அதற்கு இந்த தலத்தைத் தேர்ந்தெடுத்து, யாகசாலை அமைத்து, வேள்வி செய்தான். சிவபெருமானை தவிர்த்து அனைவருக்கும் அழைப்பு விடுத்தான்.தேவர்கள் அனைவரும் வந்தனர். வியாழன் வேள்விக் கிரிகைகளை செய்தார். அழைக்காமலே உமாதேவியும் யாகத்திற்கு வந்தாள். அப்போது, சிவபெருமானை அவமதித்துப்பேசிய தட்சன், உமாதேவியை அவமானப்படுத்தினான். கோபமுற்ற உமாதேவி, ‘இந்த வேள்வியும், வேள்வி செய்யும் தட்சனும் அழியுமாறு சபித்துவிட்டு கயிலைத் திரும்பி நடந்தவற்றை சிவபெருமானிடம் கூறினாள்.அடுத்து சிவபெருமான் தனது திருவிளையாடலைத் தொடங்கினார்.உடனடியாகவீரபத்திரரை உருவாக்கி, அவரை ஏவி ,வேள்வியை அழித்து வருமாறு பணித்தார். வீரபத்திரர் பிரம்மனை குட்டியும், கலைமகளை மூக்கரிந்தும், சந்திரனை தேய்த்தும், சூரியன் பற்களை உடைத்தும், எமன் தலையை வெட்டியும், அக்னியை நாவறுத்தும், தண்டித்தார். இந்திரன் குயிலுருவாய்ப் பயந்து ஓடினான். தட்சன் தலையை வெட்டி வேள்வித் தீயில் இட்டார். திருமால், பிரம்மன் பணிந்து, பிழை பொறுக்க வேண்டினர். பெருமான் காட்சி தந்தார்.அப்போது சிறந்த சிவபக்தையான தட்சனின் மனைவி வேதவள்ளியின் வேண்டுகோளை ஏற்று, தலை வெட்டப்பட்ட தட்சனுக்கு ,ஆட்டுத் தலையைப் பொருத்தி எழச் செய்தார். ஏனைய தேவர்கள் எழுந்தனா். தேவர்கள் வேண்டியபடி சிவபெருமான் லிங்கதிருமேனியோடு இத்தலத்தில் எழுந்தருளி, அன்றுமுதல் அருள்பாலித்து வருகிறார்” என்கிறது தலவரலாறு.தட்சன் வேள்வியைத் தகர்த்த இறைவனது வீரச்செயலை, அப்பரடிகளும் அருளியுள்ளார் .மேலும் திருஞானசம்மந்தர் தேவாரப்பதிகம் பாடி, இத்தலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். சேக்கிழாரின் பெரிய புராணம், கந்தபுராணம் இத்தலத்துப் பெருமை பேசுகிறது.’திருப்பறியலூர் புராணம்’ இயற்றி, திருவாடுதுறை ஆதினகர்த்தரும் அருளிச் செய்துள்ளார்.இக்கோயிலில் சுவாமி, மேற்கு நோக்கியும், அம்பிகை தெற்கு நோக்கியும் வீற்றுள்ளனர். இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலை வலம் வந்தால் விநாயகர், முருகன், மகாலட்சுமி, விஸ்வநாதர், துர்க்கை, பிரம்மா,லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, ஆகியோரைத் தரிசிக்கலாம். தட்சன் ஆட்டுத் தலையோடு சிவபெருமானை ருத்ரா அபிஷேகம் செய்யும் காட்சி சிற்பமாக சிறப்பாக அமைந்திருக்கிறது. தட்சனை சம்ஹாரம் செய்த வீரபத்திரர் பீடத்தின் அடியில், தட்சன் தலை சாய்ந்து கிடக்கும் உருவம் உள்ளது.இத்தலப் பெருமைகள் மற்றும் இங்கு வந்து தரிசித்தால், கிட்டும் பலன்கள் பற்றி, சண்முகசுந்தரம் சிவாச்சாரியார் மிக விளக்கமாகப் பேசுவதைக் கேட்போம்.( சண்முகசுந்தரம் சிவாச்சாரியார் பேட்டி வீடியோ)நன்றி மறந்த தட்சனை தண்டித்து, அவன் தவறை உணர்த்தி திருந்த வைத்த இத்தலத்தைத் தரிசித்துள்ளோம்.தற்போதைய சூழ்நிலையில், நன்றி மறந்தவர்கள் அதிகம் பெருகிவருகிறார்கள்.அவர்களை தண்டிக்க வேண்டாம். குறைந்தபட்சம் தங்கள் தவறை உணரச் செய்வதற்காகவது,ஒருமுறை இந்த ஆலயத்தை தரிசியுங்கள் நேயர்களே… மீண்டும் ஓர் திருத்தலத்தில் சந்திக்கும்வரை, உங்களிடம் இருந்து விடைபெறுவது ஐ தமிழ்த் தாய் !