அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், நடிகர் விஜயை எதிர்கால மக்கள் தலைவராக பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துகளை பகிர்ந்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுக தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்தாலும், அதன் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்று குற்றம்சாட்டினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மட்டும் தான் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று, மீண்டும் கட்சியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றவர் என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.
தற்போது அதிமுகவில் நடைபெறும் சூழ்நிலைகள் மிகவும் வேதனை அளிப்பதாகவும், ஒருகாலத்தில் 2 கோடி உறுப்பினர்களைக் கொண்டிருந்த கட்சி இன்று பல்வேறு பிரிவுகளாக சிதறி விட்டதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பல தேர்தல்களில் தோல்வி அடைந்தும், கட்சியை மீண்டும் எழுப்புவேன் என்று யாரும் முன்வரவில்லை எனவும் அவர் விமர்சித்தார்.
மக்களே விஜயை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு பெரிய ஆதரவு இருப்பதாகவும் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். தமிழகத்தின் வளர்ச்சி, இளைஞர்களுக்கு வாய்ப்பு மற்றும் மாற்று அரசியல் என்ற நோக்கத்தோடு விஜய் செயல்படுகிறார் என்றும் கூறினார்.
மேலும், எதிர்காலத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்களின் வரிசையில் பேசப்படக்கூடிய அரசியல் தலைவராக விஜய் உருவெடுப்பார் என்ற நம்பிக்கையும் அவர் வெளிப்படுத்தினார்.

