Site icon itamiltv.com

“பாரம்பரியத்தை பாதுகாப்பது நமது கடமை” – அமைச்சர் ரமேஷ் பேச்சு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு கூட்டம் நடத்தினார். கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோயில் சொத்துகளை மீட்டு பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், தற்போது நடைபெற்று வரும் கோயில் பணிகள், பெருந்திட்ட வரைவு பணிகள், துறை அலுவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்களின் நலத்திட்டங்கள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரமேஷ், தமிழக முதலமைச்சர் தூய்மையான மற்றும் நம்பிக்கையான நிர்வாகத்தை வழங்க உறுதி எடுத்துள்ளதாக தெரிவித்தார். அதனை முழுமையாக பின்பற்றி, அனைத்து அலுவலர்களும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் பணிகள் அமைய வேண்டும் என்றும், பக்தர்கள் மனநிறைவுடன் தரிசனம் செய்ய தேவையான அனைத்து வசதிகளும் கோயில்களில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார்.

Exit mobile version