‘எங்க சிரி பார்ப்போம்’ (LOL-Last One Laughing )என்ற இந்த நகைச்சுவைத் தொடர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் பிரைம் வீடியோ வெளியாகி வெற்றிபெற்றது. இதன் தமிழ்ப் பதிப்பைதான் நடிகர் விவேக், நடிகர் சிவா உடன் இணைந்து தொகுப்பாளராகவும், ஷோவின் நடுநிலையாளாராகவும் பங்காற்றி இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியானது பத்து காமெடியன்கள் ஓர் அறையில் தங்க வைக்கப்படுவர். அந்த பத்து பேரும் ஒருவரை ஒருவர் சிரிக்க வைக்கவேண்டும். இதில் கடைசியாக யார் சிரிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும்.
பல நாடுகளில் உருவாக்கப்பட்டு வெற்றிகண்ட இந்தத் தொடரின் இந்தி பதிப்பு கடந்த ஏப்ரலில் வெளியாகியது. இந்த நிகழ்ச்சி தற்போது தமிழிலும் வெளியாக இருக்கிறது. மொத்தம் ஆறு எபிசோடுகள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக காமெடி நடிகர்கள் சதீஷ், பிரேம்ஜி, பவர்ஸ்டார் சீனிவாசன், ஆர்ஜே விக்னேஷ்காந்த், அபிஷேக் குமார், மாயா கிருஷ்ணன், ஷியாமா ஹரிணி, பேகி, ஆர்த்தி, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் விளம்பர வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் வரும் 27-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் “எனக்கு பிடித்த கலைஞர் விவேக் சார். அவருடன் இணைந்து நான் கடைசியாக பணியாற்றியது இந்தப் படப்பிடிப்பின் போது தான் என்பதால் எல்ஓஎல் நிகழ்ச்சி என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. தனது பன்முகத்தன்மையால் விவேக் சார் ஏற்கெனவே இந்த நிகழ்ச்சியை ஒரு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக கூடுதல் சிரமம் எடுத்து பணிபுரிந்தார். அவரின் உழைப்பால் இந்த நிகழ்ச்சி சிறப்பாக வந்துள்ளது. அவருடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியது எனக்கு ஓர் அற்புதமான தருணமாக அமைந்தது” என்று இந்த நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் விவேக் உடன் தொடரை தொகுத்து வழங்கிய அனுபவம் பற்றி நெகிழ்ந்து பேசியிருக்கிறார் நடிகர் சிவா