தமிழக அமைச்சரவையின் இளம் வயது அமைச்சராக 28 வயதான கமலி பொறுப்பேற்றுள்ளார். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இல்லத்தரசியாக இருந்த அவர், தற்போது அரசியல் உலகில் கவனம் ஈர்த்துள்ள முக்கிய பெண் தலைவராக உயர்ந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த கமலி, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவரது கணவர் பச்சமுத்து இ-சேவை மையம் நடத்தி வருகிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அவிநாசி தனித்தொகுதியில் போட்டியிட்ட கமலி, பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல். முருகனை எதிர்த்து களம் கண்டார். ஆரம்பத்தில் இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கமலி வெற்றி பெற்றார். சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அவர் எல். முருகனை தோற்கடித்தார்.
அரசியல் பின்புலம் இல்லாமல் வெற்றி பெற்ற அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பேசப்பட்ட நிலையில், தற்போது கால்நடைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நான்கு பெண் அமைச்சர்களில் இளம் வயது அமைச்சராக கமலி கவனம் பெற்றுள்ளார்.

