வேளாண் பட்ஜெட் : தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார். அதில்,
“விவசாயிகளுக்கு ஏற்றம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் வேளாண் நிதிநிலை அறிக்கை அறிமுகம் செய்யப்பட்டது; ஆனால், ஏற்றத்துக்கு மாற்றாக ஏமாற்றத்தை மட்டுமே வேளாண் நிதிநிலை அறிக்கை வழங்கியுள்ளது.
2024- 25-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்த ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் முதன்மையாக எதிர்பார்த்தது வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்கப்பட வேண்டும் என்பதைத் தான்.
ஆனால், அந்த எதிர்பார்ப்பு இந்த ஆண்டும் நிறைவேறவில்லை.
நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3000 வழங்கப்பட வேண்டும் என்பது தான் விவசாயிகலின் கோரிக்கை. ஆனால், மத்திய அரசு வழங்கும் விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.100,
சாதாரண ரக நெல்லுக்கு ரூ.75 வீதம் ஊக்கத்தொகை வழங்குவதுதன் தமிழக அரசு அதன் கடமையை முடித்துக் கொள்கிறது. அதனால் நெல்லுக்கு குவிண்டாலுக்கு அதிக அளவாக ரூ.2303 மட்டுமே கிடைக்கிறது. இது போதாது.
கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்பது அடுத்த கோரிக்கை. ஆனால், மத்தியஅரசு தமிழகத்தில் விளையும் கரும்புகளுக்கான கொள்முதல் விலையாக ரூ.2919 மட்டுமே அறிவித்துள்ளது.
தமிழக அரசு நினைத்திருந்தால் குறைந்தது ரூ.1000 ஊக்கத் தொகை சேர்த்து டன்னுக்கு ரூ.4000 பரிந்துரை விலையாக அறிவித்திருக்கலாம்.
அதை சர்க்கரை ஆலைகளே வழங்கியிருக்கும். அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டிருக்காது.
ஆனால், தமிழக அரசோ, நடைபெற்று முடிந்த பருவத்திற்கு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.215 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், டன்னுக்கு ரூ.3134 மட்டுமே கிடைக்கும். இதைக் கொண்டு செலவை கூட ஈடுசெய்ய முடியாது.
விவசாயிகலின் வருவாயைப் பெருக்கவோ, பாசனப் பரப்பை அதிகரிக்கவோ எந்த திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை.
விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கான பெருந்திட்டங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.
வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியதன் நோக்கமே அத்துறைக்கான நிதிஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தான்.
ஆனால், வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு (வேளாண் பட்ஜெட்) அதிகரிக்கப்படவே இல்லை.
2024- 25ஆம் ஆண்டில் கூட வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.11,194 கோடியாகவே உள்ளது.
நிதிஒதுக்கீட்டை அதிகரிக்காமல் வேளாண்துறை மானியக் கோரிக்கையை வேளாண் நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்வதால் எந்த பயனும் இல்லை.
கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு அரசாணைகள் மட்டும் தான் வெளியிடப்பட்டுள்ளனவே தவிர ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை.
வேளாண் நிதிநிலை அறிக்கை என்பது தமிழகத்திற்கு புதியது. அதனால், முதல் 3 நிதிநிலை அறிக்கைகளில் தடுமாற்றங்கள் இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால், நான்காவது அறிக்கையும் பயனற்ற ஆவணமாக இருப்பது விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழக அரசு தோற்று விட்டதையே காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.