இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ”ஆசியாவின் ராணி என பெயர் சூட்டப்பட்ட இரத்தினக் கல்லினை கொள்வனவு செய்ய டுபாய் நிறுவன மொன்று விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ரத்தினக் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 310 கிலோகிராம் எடைகொண்ட இந்த நீலக்கல், இரத்தினபுரி மாவட்டத்தின் பட்டுகெதர பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தது.
ஆசியாவின் ராணி என பெயர் சூட்டப்பட்ட இந்த நீல ரத்தினக் கல்லினை சந்தைப்படுத்தி விற்பனை செய்ய இலங்கை முயன்று வருகிறது. இந்த ரத்தினக்கல்லை கொள்முதல் செய்ய பல உலக நாடுகள் போட்டி போட்டு வருகின்றன.
அந்த வகையில் உலகின் மிகப்பெரிய இந்த நீலக்கலை கொள்வனவு செய்வதில் அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியிருந்தன .
இதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் முன்னதாக விலைமனு கோரலுக்கான விண்ணப்பத்தை முன்வைத்த நிலையில், சீனாவும் இந்த போட்டியில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதேவேளை வொஷிங்டன் நகரில் உள்ள நூதனசாலை ஒன்றில் காட்சிப்படுத்துவதற்காக அமெரிக்காவும் குறித்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரத்தினக்கல்லினை கொள்முதல் செய்ய துபாய் நிறுவனம் ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த இரத்தினக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு கொள்முதல் செய்ய அந்த நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. டுபாய் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த விலையை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், குறித்த விலையில் இரத்தினக்கல்லை வழங்க இலங்கை தயாராக இல்லை என்றும் அதனை விடவும் அதிக விலையில் ஏலத்தில் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன