சென்னை பெரம்பூர் வந்த ரயிலில் இருந்து ரயில்வே பாதுகாப்பு போலீசார் 16 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் சென்னை பெரம்பூர் வந்தபோது, ரயில்வே பாதுகாப்பு போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர் அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 3 பைகளை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் 16 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் .
இதையடுத்து அந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் இதை யார் ரயிலில் எடுத்து வந்தது என்பது குறித்து வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கஞ்சா விற்பனைகள் அதிகரித்து வரும் நிலையில் போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு கஞ்சாவை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.