நேற்று முன்தினம் வரையில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்த நிலையில், சென்னையில் மேலும் ஒரு துணை கமிஷனர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் 3 நாட்களுக்கு முன்பு வரை 70 போலீசார் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்றைய தினம் 140 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் சென்னையில் மட்டும் இன்று காலை வரையில் 160 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் மட்டுமே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் சிலருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததையடுத்து போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 6 போலீசார் வீட்டு தனிமையிலும், 2 பேர் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா முதல் மற்றும் 2-வது அலைகளின் போதும் போலீசார் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருந்தனர். அந்தவகையில் தற்போதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை தினமும் 10 காவலர்கள் வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனா 3 அலைகளிலும் சேர்த்து பாதிப்புக்குள்ளான போலீசாரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 143 காவலர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் காவல்துறையில் சுமார் 500 பேர் வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து போலீசார் மிகுந்த கவனத்துடன் பணிபுரிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசிகளை அனைத்து காவலர்களும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.