தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 1,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாடு விதித்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய, பேரியம் என்ற ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசு கள் மற்றும் சரவெடிகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டது.
மேலும் அறிவிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடிப்பவர்கள் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும் அரசின் அறிவுறுத்தலை மீறி பலரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 1,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தலைநகர் சென்னையில் மட்டுமே, 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையில் வழிகாட்டுதலை மீறி பட்டாசுக் கடைகள் நடத்தியதாக 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.