சபரிமலைக்கு சென்ற புதுச்சேரியை சேர்ந்த பக்தர் ஒருவருக்கு அதிர்ஷ்டலாப சீட்டின் மூலம் ரூ.20 கோடி பரிசு கிடைத்துள்ளது.
தரிசனத்தை முடித்து விட்டு திருவனந்தபுரம் வந்தபோது இந்த அதிர்ஷ்ட சீட்டை வாங்கியதாக தெரிவித்தார்.
தமிழ் நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில், தனியார் நிறுவனங்களுடன் கேரளா அரசும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலத்தவர்களும் கேரளாவிற்கு செல்லும் போது அங்கு லாட்டரி சீட்டுக்களை வாங்கி வருகின்றனர். அதில் சிலர் பரிசுகளை வென்ற செய்திகளையும் நாம் பார்த்திருப்போம்.
இந்த நிலையில் புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர் ரூ.20 கோடி பரிசை வென்றுள்ளார்.
கடந்த 24-ந்தேதி கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது.
ஒரு லாட்டரி சீட்டு ரூ.400 மதிப்பில் விற்கப்பட்டது. இதில் மொத்தம் 45 லட்சம் சீட்டுகள் விற்பனையாகி இருந்தன.
இந்த குலுக்கலில் முதல் பரிசு ரூ.20 கோடி எக்ஸ் சி 224091 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு கிடைத்து இருந்தது.
இந்த எண்ணை வைத்து விசாரித்ததில் இந்த லாட்டரி சீட்டு பாலக்காட்டில் மொத்த விற்பனையாளரிடம் இருந்து வாங்கி வந்து திருவனந்தபுரத்தில் உள்ள கடையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
ஆனால், இந்த லாட்டரி சீட்டை யார் வாங்கிச் சென்றார் என்ற விபரம் தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் தான் அந்த அதிஸ்டசாலி யார் என்பது குறித்து தெரிய வந்திருக்கிறது.
ஆனால் அந்த நபர் தனது பெயர் விபரங்களை வெளியில் சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : perarignar anna -வின் 55வது நினைவு தினம்-அரசியல் தலைவர்கள் அஞ்சலி
இதனால், கேரள லாட்டரி இயக்குனரகமும் அவரது பெயரை வெளியிட மறுத்து விட்டது.
புதுச்சேரியை சேர்ந்த 33 வயதான அந்த அதிஸ்டசாலி இளைஞன் சபரிமலைக்கு வந்துள்ளார்.
சபரி மலையில் தரிசனத்தை முடித்து விட்டு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு வந்த போது இந்த அதிர்ஷ்ட சீட்டை வாங்கி உள்ளார்.
லாட்டரி சீட்டை யார் வாங்கிச் சென்றார் என்ற விபரம் தெரியாமல் இருந்த நிலையில் தான் நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு அந்த இளைஞன் தனது நண்பர்களுடன் லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அந்த வாலிபர் முதல் பரிசு கிடைத்த அந்த லாட்டரி சீட்டை அலுவலகத்தில் ஒப்படைத்து சான்றிதழ் பெற்றுக் கொண்டார்.
ரூ.20 கோடி பரிசு தொகையில், அதிர்ஷ்டசாலியான அய்யப்ப பக்தருக்கு வரி நீங்கலாக ரூ.12.60 கோடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.