மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்றிரவு வெடித்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர் மூவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், குகி இன மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. அன்று முதல் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏராளமானோர் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இரண்டு குக்கி சமூக பெண்களை ஆடைகளை களைந்து மெய்தி சமூக ஆண்கள் சிலர் ஊர்வலமாக அழைத்து வந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்றிரவு மீண்டும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மெய்தி சமூகத்தை சேர்ந்த தந்தை, மகன் உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. க்வாக்டா பகுதியில் நடந்த இந்தக் கலவரத்தால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொது போக்குவரத்து மற்றும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஆயுதப் படைகளுக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும் இடையே இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில் 17 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது