தொடர்கதையாகி வரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது..
“எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையால் கைது – தொடர்கதையாகி வரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து 4 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 33 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
இதையும் படிங்க : வயநாட்டில் மர்ம சத்தம் – பூமிக்கு அடியில் என்ன நடக்கிறது? மக்கள் அச்சம்!!
கடந்த சில தினங்களுக்கு முன்பாக இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதி தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை பதிவு செய்த பின்னரும் இலங்கை கடற்படையினரின் அராஜகப் போக்கு தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது என ஒரு புறம் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலும், இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் மற்றொரு புறமும் தொடர்கதையாகி வருவது மீனவ சமுதாயத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதோடு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் மீட்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.” எனக் கூறியுள்ளார்.