கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கிய 48 லட்சம் பேரில், 35 லட்சம் பேரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் ஏராளமான பொதுமக்கள் நகைக்கடன் வைத்திருந்த நிலையில், ஒரு குடும்பத்துக்கு ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் சில தகுதியின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், பொது நகை கடன்களை ஆய்வு செய்வதற்கு அயல் மாவட்டங்களில் உள்ள அலுவலர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு, சேலம் மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் சரிபார்க்கும் பணி முடிவு பெற்று, தகவல் பதிவேற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி புதிய பட்டியலையும், நிபந்தனைகளையும் கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, நகைக் கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது என்றும், 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்திருந்தால் தள்ளுபடி செய்யப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளதோடு, கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவர்கள், ஆதார் எண்ணைத் தவறாக வழங்கியவர்கள், குடும்ப அட்டை வழங்காதவர்கள், வெள்ளை அட்டை உடையவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.