TN Govt Bus சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற சொந்த ஊர் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.
இந்த தேர்தல் திருவிழாவின் முக்கிய நாளான இன்று பொதுமக்கள் வாக்களிப்பதற்காக கடந்த இரு நாட்களில் சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னை போன்ற பெரு நகரங்களில் தங்கி பணியாற்றும் பொதுமக்கள், தங்களது சொந்த ஊரில் வாக்களிக்க ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 56.68% வாக்குப்பதிவு
அதன்படி, கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், 17 , 18 ஆம் தேதிகளில் 2,308 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த வகையில், மக்களவைத் தேர்தலை ஒட்டி இயக்கப்பட்ட 7,299 பேருந்துகளில் 4,03,800 பேர் பயணம் மேற்கொண்டனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி சென்னையில் இருந்து முந்தைய நாள் 3,353 பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றில் மொத்தம் 1,36,963 பேர் பயணம் மேற்கொண்டனர். ஆனால் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான நேற்று இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 2,55,000 பேர் பயணம் செய்தனர்.
குறிப்பாக தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளில் சென்னையில் இருந்து பணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கையை விட இது அதிகம் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.