தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், ராஜேந்திரன் மற்றும் கோ.வி.செழியன் ஆகியோர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன் பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் மற்றும் கோ.வி.செழியன் ஆகியோருக்கு ஆளுநர் ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
மேலும் இந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பங்கேற்றிருந்தார் . அவரும் மேடையில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தனது குடும்பத்துடன் அமைதியாக அமர்ந்திருந்தார்.
இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள் ஆளுநருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர் அப்போது ஆளுநருக்கு வலதுபுறம் முதல்வரும், இடதுபுறம் துணை முதல்வரும் அமர்ந்தனர்.
புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு :
செந்தில் பாலாஜி – மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை
கோவி செழியன் – உயர்கல்வித் துறை
ஆர்.ராஜேந்திரன் – சுற்றுலாத் துறை
சா.மு. நாசர் – சிறுபான்மை நலத்துறை