இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் இதுவரை 5,087 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனர்களின் ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் தீரா பகையின் காரணமாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஜிஹாதிகள் மிகப் பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்தினர்.
இந்த கோர தாக்குதலில் இஸ்ரேலில் வசிக்கும் 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அது மட்டும் இன்றி 100க்கும் மேற்பட்டோரையும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
ஹமாஸ் ஜிஹாதிகளின் கொலைவெறி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல், பாலஸ்தீனர்களின் எஞ்சிய நிலப்பரப்பின் மீது இடைவிடா தாக்குதல்களை நடத்தி வருகிறது . இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா, மேற்கு கரை பகுதிகளில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 5,087 பேர் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த போரில் 2,055 குழந்தைகள், 1,119 பெண்கள், 217 முதியவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 15,273 பேர் காயமடைந்துள்ளதாகவும் திட்டத்தட்ட 1,500 பேர் காணாமல் போனதாகவும், அதில் 830 பேர் குழந்தைகள் எனவும் காஸா சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே உக்ரைன் – ரஷ்யா போரில் பல அப்பாவி உயிரல்கள் பலியான நிலையில் தற்போது நடந்து வரும் இஸ்ரேல் – காஸா போரில் 5,087 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.