Sri Vennikarumbeswara Swami Temple : 4,448 நோய்களையும் தீர்க்கும் திருத்தலம்…
குறிப்பாக சர்க்கரை நோயைப் போக்கும் அற்புத திருத்தலம்! “
ஐ தமிழ் தாய் நேயர்களுக்கு பணிவான வணக்கம்.
“நோயற்ற வாழ்வே குறைவறற செல்வம்” என்பது ஆன்றோர் வாக்கு. மனித உடலில் 4’448 பிணிகள் ஏற்பட வாய்ப்பும், அவைகள் தீருவதற்கான வழிமுறைகளையும் திருமூலர் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் உயிர்களைப் படைத்த ஈசன் , மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாதவிதமான நோய்களையும் நீக்குவதற்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். முக்கியமாக இன்று உலகில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும்.
அத்தகைய ஆச்சர்யமான திருத்தலத்திற்கு உங்களை அழைத்து செல்வதில்
ஐ தமிழ் தாய் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோயில்வெண்ணியில் அமைந்திருக்கிறது ஸ்ரீ வெண்ணிக்கரும்பேஸ்வர சுவாமி திருக்கோயில் (Sri Vennikarumbeswara Swami Temple). திருவெண்ணியூர் என்றழைக்கப்பட்டு, தற்பொழுது கோவில்வெண்ணி என்ற பெயருடன் விளங்கி வருகிறது. காவிரித் தென்கரை திருத்தலங்களுள் இது 102 -வது திருத்தலமாகும்.
இக்கோயில் உருவான வரலாறும் வியப்பூட்டும் செய்திதான்.
முற்காலத்தில் இத்திருத்தலம் கரும்புக் காடுகளால் சூழப்பட்டிருக்க, திருவாரூர் ஸ்ரீ தியாகராஜப் பெருமான் திருக்கோயிலை திருப்பணி செய்த முசுகுந்த சக்கரவர்த்தி, இத்தலத்தின் வழியாக தன் பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது இப்பகுதியில் இரண்டு முனிவர்கள், இங்குள்ள தலவிருட்சம், ‘கரும்பு ‘என்றும்
‘நந்தியாவர்த்தனம்’ என்றும் தங்களுக்குள் கடுமையாக வாதிட்டுக் கொண்டிருந்தனர்.
அதனைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்த முசுகுந்த சக்கரவர்த்தி, ” முனிவர்களே… இக்கரும்புக்காட்டில் திருக்கோயிலும் இல்லை. இறைவனின் திருவ வடிவமும் இல்லை. ஆனால் நீங்கள் தல விருட்சத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறீர்களே?” என்று கேட்டார் .
இதையும் படிங்க : வந்தாரை வாழவைக்கும் வனப்பேச்சி கோவில் சுவாரஸ்ய தகவல்கள்!!
அப்பொழுது இறைவன் அசரீரீயாக ” தாம் கரும்பு வடிவில் இங்கு பூமியில் சுயம்பு மூர்த்தமாக இருப்பதாகவும், இத்தலத்தின் விருட்சம் வெண்ணி என்றழைக்கப்படும் நந்தியாவர்த்தனம்” என்றும் கூறி அருளினார். அதனைத் தொடர்ந்து சக்கரவர்த்தி, கரும்புக் காட்டில் இறைவனைக் கண்டெடுத்து திருப்பணிகள் செய்தார்.
இந்த லிங்கம் அளவில் பெரிய சதுர வடிவமாகவும், அதன் பாணம் கரும்புக் கட்டுகளால் ஆனதுமாக வித்தியாசமாக காட்சியளிக்கும். தானாக தோன்றிய இந்த சுயம்பு மூர்த்தம் நிகழ்வானது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
அதன்பின்னர் தமிழக வரலாற்றில் பிரசித்தி பெற்ற வெண்ணிப் போருக்குப் பின், சோழ மன்னன் கரிகாலன
இவ்வாலயத் திருப்பணிகளைச் செய்துள்ளான்.
சங்ககாலத்திலேயே சிறப்பு பெற்றிருந்த இத்தலம் ஞான சம்பந்தப் பெருமானாலும், திருநாவுக்கரசுப் பெருமானாலும் பாடல் பெற்ற திருத்தலமாகும். சுந்தரர் சேத்திரக் கோவையில் இங்குள்ள இறைவனை பிடி தீர்க்கும் பெருமானாகப் பாடி பரவசமடைந்துள்ளார்.
“மருகல் உறைவாய் மாகாளத்தாய் ! – மதியம் சடையானே!
அருகர் பிணி நின் அடியார் மேல் அகல அருள்வாயே
கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே ” என பாடியுள்ளார்.
இதனால் இத்தல இறைவன் ஸ்ரீ வெண்ணிக்கரும்பேஸ்வரர் தன்னை நாடி வந்து வணங்கும் பக்தர்களின் அனைத்து விதமான பிணிகளைப் போக்குவராக குறிப்பாகச் சர்க்கரை நோயை போக்குவராக அருள்பாலிக்கிறார்
இத்தல இறைவி ஸ்ரீ சௌந்தரநாயகி எனவும் தமிழில் அழகியநாயகி எனவும் அழைக்கப்படுகிறார். பெயருக்கு ஏற்ப அழகிய வடிவில் காட்சியளிக்கிறார். இத்தலத்திலுள்ள சூரிய புஷ்கரணி , சந்திர புஷ்கரணி தீர்த்தங்கள் யாவும் சர்வ ரோகங்களையும் நீக்க வல்லனவாகும்.
1977 க்கு பின் இந்த ஆலய கும்பாபிஷேகத் திருப்பணி பரம்பரை அறங்காவலர் வைரவன் செட்டியார் தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது. “திருப்பணியில் பங்கேற்கும் பக்தர்களுக்கு நல்ல பலன் கிட்டுவது உறுதி” என்று கூறும் பிரபாகரன் சிவாச்சாரியார், இக்கோயிலின் சிறப்புகளை அழகாக விவரிக்கிறார்.
உடல் நோய்களோடு, மன நோய்களையும் அகற்றும் பழம் பெருமை வாய்ந்த இத்தலத்தை வாழ்வில் ஒருமுறையேனும் நீங்களும் தரிசிக்கலாமே. மீண்டும் ஓர் ஆச்சர்யமான தலத்தை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுவது ஐ தமிழ் தாய்!