ஐ தமிழ் நேயர்களுக்கு அன்பான வணக்கம்.
“காதல் திருமணம் செய்து கொள்ளலாம். தவறில்லை. ஆனால் பெற்றோர் ஆசியுடன்தான் நடைபெறவேண்டும்”என்ற உயரிய கோட்பாடை உலகுக்கு எடுத்துரைத்த, திருமணத் திருத்தலம் ஒன்று, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்திருக்கிறது.
இங்கு அருள்மிகு மிருதுமுகிழாம்பிகை சமேத அருள்மிகு உக்தவேதீசுவரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். இந்த அம்பாளுக்கும், ஈசனுக்கும் ஸ்ரீ அரும்பன்ன வனமுலைநாயகி சமேத ஸ்ரீ சொன்னவாறறிவார் என்ற தமிழ்ப் பெயர்களும் உண்டு.
அப்பர், சுந்தரர் , சம்மந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல்பெற்ற தலமாகும். அம்பாள், சிவபெருமானை வழிபட்டுத் திருமணம் செய்த இத்திருக்கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்வதில் ஐ தமிழ்த் தாய் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
ஐந்து நிலை இராஜகோபுரத்தை அடுத்து முதல் பிரகாரத்தில், அம்பாள் கோயில் எதிரே தலவிருட்சமான, உலகில் வேறெங்கும் இல்லாத உத்தாலம் மரம் உள்ளது.
அதன் அருகே துணை வந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. கொடிமரம், நந்தி, பலிபீடங்களை கடந்து இரண்டாம் பிரகாரத்தை அடைந்தால் அழகிய மகா மண்டபம் திகழ்கிறது.
அதில் நடராஜரை தொடர்ந்து கிழக்குப் பிரகாரத்தில் விநாயகர், கெஜலட்சுமி, சபாநாயகர்,அர்த்தநாரீசுவரர், துர்க்கை ,பிச்சாடனர், பிரம்மா,நவக்கிரகங்கள், மங்கள சனீஸ்வரர், பைரவர், சூரியன்,சந்திரன், லிங்கோத்பவர் ஆகியோர் வீற்றுள்ளனர்.
வள்ளி,தெய்வானையுடன் ஸ்ரீ சண்முகநாதர் தனிக்கோயில் கொண்டுள்ளார்.தெற்குப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, குபேர கணபதி,அகத்தியர், வல்லப கணபதி, அறுபத்து மூவர் நாயன்மார் மற்றும் நான்கு சமயக்குரவர்கள் திருவுருவங்கள் அமைந்துள்ளன.
“பரதமாமுனிவர் ‘பார்வதியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும்’ என கடும் தவம் வேள்வி செய்தார்.இவரின் வேண்டுகோளை ஏற்ற இறைவன், வேள்விக் குண்டத்தில் பார்வதியைப் பரத மாமுனிவரின் மகளாகப் தோன்ற செய்தார்.
பார்வதியும் வளர்ந்து பெரியவளாகிறாள். இவளின் ஒரே விருப்பம் சிவனைத் தன் கணவனாக அடைவதுதான். அதற்காக காவிரிக்கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து தினமும் வழிபாடு செய்து வந்தாள்.எட்டாவது நாளில் ஈசனே,அம்மையின் திருவுளப்பாங்கினை அறிந்து , கருங்கல்லான லிங்கம் வடிவில் அமர்ந்தருளினார்.
பார்வதி அன்றும் வழக்கப்படி பூஜை செய்ய வந்தபோது, சிவனே அவ்வாறு எழுந்தருளியிருப்பதைக் கண்டு மகிழ்ந்து காதலால் தலைகுனிந்து வணங்கினாள்.
இதையும் படிங்க : மரணப் பயத்தைப் போக்கி, ஆயுளை நீடிக்கும் காலகாலேஸ்வரர் கோயில்!!
சிவனும் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு, பார்வதியின் கையை பற்றி அழைத்தார். ஆனாலும், பார்வதி சிவனுடன் செல்லாமல் “தேவரீர்…. நூல்களில் விதித்த விதிகள் நிலைபெற, என்னை வளர்த்த பெற்றோர்கள் மகிழ்ச்சியடையும்படி அவர்கள் சம்மதத்துடன்தான் என்னைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் ” என்று விண்ணப்பிக்க, ஈசனும் “அவ்வாறே செய்வோம் ” என்றருளினார்.
சில காலம் கழித்து, நந்தி்பெருமானை பரதமாமுனிவரிடம் மணம் பேசி வர தூது அனுப்பி வைக்கிறார். முனிவரும் சம்மதிக்க, மணநாள் குறிக்கப்பட்டது.
கயிலாயத்திலிருந்து மணக்கோலத்தில் ரிஷப வாகனத்தில் சிவன் வந்தார்.’ உத்தாலம்’ மரம் குடையாக நிழல் தர, விநாயகர் துணையாக முன்னே செல்ல, தேவர்கள் புடைசூழ,மணமகள் இருப்பிடமான குத்தாலம் வந்து,இத்தலத்தில் பெற்றோர் சம்மதத்துடன் பார்வதியை பரமேஸ்வரன் திருமணம் செய்து கொண்டார்.
சிவபெருமான் இங்கு வந்து திருமணம் செய்ததற்கு அடையாளமாகதான், அவர் அணிந்து வந்த பாதுகைகளையும், கயிலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் விட்டு்ச் சென்றார்.
அவற்றை இன்றும் நாம் தரிசிக்கலாம். பல நோய்களை தீர்க்க வல்ல உத்தால மரத்தால்தான் இத்தலம் “ குத்தாலம் ’ எனப்பட்டது.
திருமணத் திருத்தலம் என்பதால் இங்கு அருள்பாலிக்கும் அம்பாளை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதிகம்.
சுந்தரர் இங்குள்ள பதும தீர்த்தத்தில் நீராடி தனது தீராத நோய்கள் அகன்று, ” மின்னுமா மேகங்கள் ” என்று பதிகம் பாடி வழிபட்டார்.விக்கிரம சோழன் மனைவி கோமகளின் குட்ட நோய் போக்கிய தலம்.
சிவபக்தனின் காசநோய் அகற்றிய தலம்.கதிரவன் அருள்பெற்ற கார்த்திகை மாத ஞாயிறுதோறும் வழிபடுவோர் இன்றும் பல்வகை நன்மைகளை பெறுகின்றனர். ” 62 ஆண்டுகளுக்குபின் தருமை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளால் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டிருப்பதை” கோயில் நிர்வாகி ராமலிங்கம் தெரிவிக்கிறார்.
தலசிறப்புகள் பற்றி கோயில் சிவாச்சாரியார் பாலாஜியிடம் பேசினோம்.
அன்னை பார்வதி இப்பூமியில் மானிட ஜென்மமாய் அவதரித்து, சிவன்மீது அதீத காதல் கொண்டாலும், பெற்றோரிடம் முறைப்படி பெண் கேட்டு திருமணம் செய்து கொள்ளும்படி இறைவனிடம் வேண்டுகோள் விடுத்து, அதன்படியே காதலனை கரம்பிடித்தாள்.
இது எக்காலத்திலும் காதலர்கள் கடைபிடிக்க வேண்டிய பாடம் என்பதை உணர்த்தும் தலமாகும். மீண்டும் ஓர் அற்புதமான தலத்திற்கு அழைத்து செல்லும்வரை உங்களிடமிருந்து விடைபெறுவது ஐ தமிழ் !