பிரபல கன்னட நடிகரும், நடிகர் அர்ஜுனின் மாமனாருமான ‘கலாதபஸ்வி’ ராஜேஷ் தனது 89 வயதில் காலமானார்.
பெங்களூரை பூர்விகமாகக் கொண்ட ராஜேஷ் சிறு வயது முதலே ஏராளமான நாடகங்களில் நடித்து வந்தார். வித்யாசாகர் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களுக்காக தன் பெயரை ராஜேஷ் என்று மாற்றிக் கொண்டார்.
1960-களில் திரைத்துரையில் நுழைந்த அவர் ‘சோஸா குட் ஃபார்ட்யூன்’, ‘கலியுகா’, ‘வீர சங்கல்பா’, ‘கங்கா கௌரி’ உள்ளிட்ட 150க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இறுதியாக அவர் கவுரவ வேடத்தில் நடித்த ‘ஓல்ட் மங்க்’ திரைப்படம் வரும் பிப்.25 வெளியாகிறது. ‘கலாதபஸ்வி’ ராஜேஷ் என்று திரையுலகில் அழைக்கப்பட்ட இவரது மகள் ஆஷாராணியைத் தான் நடிகர் அர்ஜுன் திருமணம் செய்துள்ளார்.
சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து மூச்சுத் திணறல் அதிகமானதால் அவருக்கு ஆக்சிஜன் பொருத்தப்பட்டது. எனினும் இன்று காலை சிகிச்சை பலனின்றி ராஜேஷ் உயிரிழந்தார். இன்று மாலை 6 மணியளவில் அவரது இறுதிச் சடங்குகள் பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
‘கலாதபஸ்வி’ ராஜேஷ் மறைவுக்கு கன்னட திரையுலகினர் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.