பாகுபலி’ திரைப்படத்தின் நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘சலார்’. இந்த திரைப்படத்தை கே.ஜி.எப். திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார்.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சலார்’ படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார்.
‘சலார்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப்படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், எதிர்பாராத சில காரணங்களுக்காக சலார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக இன்று படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ்,
“தற்போது, இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. “சலார் படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றி. சில காரணங்களால், படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்கிறோம். நல்லதொரு சினிமா அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கத்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
தரமான படத்திற்காக எங்களின் குழு அயராது உழைத்து வருகிறது.
புதிய ரிலீஸ் தேதியை கூடிய விரைவில் அறிவிப்போம். சலார் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வரும் வரை காத்திருங்கள். எங்களின் பயணத்தில் நீங்கள் பங்குபெற்றதற்காக நன்றி.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.