அமைச்சர் உதயநிதி உயிருக்கு உத்தரப்பிரதேச சாமியார் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி டெங்கு ,கொரனோ ,மலேரியா இதை எல்லாம் நாம் எதிர்க்க கூடாது அதனை ஒழித்து கட்ட வேண்டும்.
அப்படி தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்க்க கூடாது அதனை ஒழித்து கட்டவேண்டும் என்று தெரிவித்து இருந்தது பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அமைச்சர் உதயனியின் இந்த பேச்சுக்கு அமித்ஷா, ஜேபி நட்டா, அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ. 10 கோடி என உத்தரபிரசேத மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா எனும் சாமியார் அறிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டுக் கொளுத்தியும் தனது எதிர்ப்பை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தமிழகம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து “எனது தலையை சீவ ரூ. 10 கோடி எதற்கு? 10 ரூபாய் சீப்பு போதுமே என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவ, மீண்டும் அயோத்தி சாமியார் கொலைமிரட்டல் பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்க தயார் என்றும், நாட்டில் உள்ள 100 கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அமைச்சரின் உயிருக்கு உத்தரப்பிரதேச சாமியார் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலை மற்றும் நீலாங்கரையிலுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வழக்கமாக சுழற்சி முறையில் ஒரு காவலர் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.