மதுரையில் இன்று நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டினை எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி தொடங்கி வைத்தபோது ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்பட்டன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றபின் அக்கட்சியின் மாநில அளவிலான மாநாடு மதுரையில் இன்று ஞாயிற்றுக் கிழமை (20.08.23) நடைபெறுகிறது. இதற்காக மதுரை வலையங்குளத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டின் முகப்பு கோட்டை போன்ற தோற்றத்திலும், அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவ அமைப்புகளும் அமைக்கப்பட்டு, அதோடு எடப்பாடி பழனிசாமியின் படமும் வைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை செய்யப்பட்ட 5.5 அடி உயர வெள்ளி வேல் வழங்கினர்.
தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் இன்று நடைபெறும் எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள நிலையில், அ.தி.மு.க. மாநில மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி தொடங்கி வைத்தார். கொடியேற்றும் போது எடப்பாடி பழனிசாமி மீது ஹெலிகாப்டரில் இருந்து 600 கிலோ பூக்கள் தூவப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. தொடங்கி 51-ம் ஆண்டினை குறிக்கும் விதமாக 51 அடி உயர கொடிக்கம்பத்திலும் கட்சி கொடியை ஏற்றினார். அதன் பிறகு ஜெயலலிதா பேரவை சார்பில் 3000 தொண்டர்கள் அணிவகுத்து வந்து எடப்பாடி பழனிசாமிக்கு, மரியாதை அளித்தனர்.
பின்னர், மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த, அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த விளக்க படங்களும், முக்கிய திட்டங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ள கண்காட்சியை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், இன்று நடைபெறும் மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள், கவியரங்குகள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு மாநாட்டு உரை நிகழ்ச்சிகள் தொடங்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்புரை ஆற்றுகின்றனர். மேலும், செல்லூர் ராஜூ உள்பட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளும் முன்னிலை வகித்து பேசுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு தலைமை உரை ஆற்றுகிறார். அதில், அ.தி.மு.க. ஆட்சிக்கால திட்டங்கள், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து அவர் பேசுகிறார். பின்னர், நன்றியுரையுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.