மீனவர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிர்வாக திறனற்ற மக்கள் விரோத விடியா திமுக அரசைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் நாளை (13.09.2023) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்தியில் கூறிருப்பதாவது :
அம்மாவின் அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றிற்கு இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு மூடுவிழா நடத்தியுள்ளது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்ற புதிய பல்கலைக்கழகத்தை 26.2.2021 அன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தேன்.
அம்மாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்தினால், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், விடியா திமுக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சருமான திரு. பொன்முடி அவர்கள், இந்த பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று வாக்களித்த மாவட்ட மக்களுக்கு எதிராக செயல்பட்டார்.
இதனைக் கண்டித்து, கழக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. சி.வி. சண்முகம் தலைமையில் கடந்த 26.7.2021 அன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில், அம்மாவின் அரசு விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து தினமும் 60MLD கடல் நீரை, குடிநீராக்கும் 1502.72 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன்மூலம் விழுப்புரம் நகராட்சி, திண்டிவனம் நகராட்சி, விக்கிரவாண்டி பேரூராட்சி, மரக்காணம் பேரூராட்சி மற்றும் மரக்காணம், வானூர், மைலம், விக்கிரவாண்டி, காணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 692 கிராம குடியிருப்புகள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் திண்டிவனம் 519001 ஆகியவை பயன்பெற இருந்த நிலையில், நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்த திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த செயல்படாத விடியா திமுக அரசு, அம்மாவின் அரசால் தொடங்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டது. இதனைக் கண்டித்தும், அமைச்சருமான சண்முகம் தலைமையில், கடந்த 27.8.2022 அன்று திண்டிவனம் காந்தி சிலை அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீனவ கிராமங்களில் சுமார் 15 ஆயிரம் மீனவ குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களிடம் சுமார் 20 இயந்திரப் படகுகளும், 1250 விசைப் படகுகளும், 200 நாட்டுப் படகுகளும் உள்ளன. அதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 44 மீனவ கிராமங்களில் சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் வசிக்கின்றனர். அவர்களிடம் 12 இயந்திரப் படகுகளும், 2000-த்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளும் உள்ளன. சென்னையை அடுத்து, கடலூர் மாவட்டத்தில்தான் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. நடுவில் உள்ள செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்களுடைய விசைப் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்த, இரண்டு மாவட்டங்களிலும் மீன்பிடித் துறைமுகங்கள் இல்லை.
இதன் காரணமாக, புயல், சூறாவளி காலங்களில் இரு மாவட்டங்களிலும் உள்ள மீன்பிடிப் படகுகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. எனவே, விழுப்புரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில், அழகன்குப்பம் பக்கிங்ஹாம் கால்வாயிலும், ஆலம்பராகோட்டை அருகிலும் ஒரு மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு அம்மாவின் அரசு, கால்நடைத் துறை மூலம் 6.2.2020 அன்று அரசாணை எண். 28-ன் படி, சுமார் ரூ. 235 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி, இப்பணிக்கான பணித் தளம் ஒப்பந்ததாரருக்கு ஒப்படைக்கப்பட்டு, 7.12022 முதல் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தனியார் ஒருவர், இங்கு துறைமுகம் அமைந்தால் கடல் ஆமைகள் முட்டையிட முடியாது; கடல் ஆமைகளின் இனப் பெருக்கம் குறையும் என்று கூறி பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், தனது தந்தையின் நினைவாக சென்னையில் கடலின் நடுவே, எழுதாத பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை எதிர்த்து, அரசுக்கு ஆதரவாக வாதிட, அரசு செலவில்: இந்தியாவிலேயே தலைசிறந்த மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடினார்.
பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக, மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு எதிராக, பசுமைத் தீர்ப்பாயத்தில் தனியார் ஒருவரால் போடப்பட்ட வழக்கை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, சென்னை முதல் கடலூர் வரை உள்ள நீண்ட, நெடிய கடற்கரையில் ஒரே ஒரு மீன்பிடித் துறைமுகம் கட்டுவதால், கடல் ஆமைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பது போன்ற பல முக்கிய குறிப்புகளை சுட்டிக்காட்டி இவ்வழக்கை வாதிடாததால், பசுமைத் தீர்ப்பாயம் இத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய தீர்ப்பளித்துள்ளது.
2019-20ல் அம்மாவின் அரசில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் இப்போது, விடியா திமுக அரசின் வற்புறுத்தல் காரணமாக, மீன்பிடித் துறைமுகம் கட்டுவதற்கு எதிராக அறிக்கை அளித்துள்ளதாக செய்திகள் தெரிய வருகிறது. இந்த வழக்கு காரணமாக துறைமுகம் கட்டும் பணிகளை விடியா திமுக அரசு நிறுத்தியுள்ளது.
அம்மாவின் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பயனடையும் வகையில்: மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு நிறுத்தியதற்கு, எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை நிறுத்தி, மீனவர்களின் நலனுக்கு. எதிராக செயல்பட்டு வரும் நிர்வாகத் திறனற்ற மக்கள் விரோத விடியா திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், வருகின்ற 13.9.2023 – புதன் கிழமை காலை 9 மணி அளவில், மரக்காணம் தாலுகா அலுவலகம் எதிரில், கழக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.சி.வி. சண்முகம், தலைமையில், 13/09/2023 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர்களும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ள வேண்டும்.
மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மீனவப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.