தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டில் இந்த தேர்வை 8,94,264 மாணவ, மாணவியர் எழுதினர். இதில் மாணவிகளின் எண்ணிக்கை: 4,47,061 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை: 4,47,203 தேர்வு எழுதினர் .
இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியானது.அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றுள்ளது.
இதையும் படிங்க: விரைவில் நாம் சந்திப்போம்! -விஜய் கொடுத்த அப்டேட்.. உற்சாகத்தில் மாணவர்கள்
வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது. மேலும் தேர்வில் 75,521 பேர் தோல்வியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
பள்ளிக்கல்வியின் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நீங்கள், தங்களுக்கு விருப்பமான கல்லூரிப் படிப்பை சாத்தியப்படுத்தும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து, நன்கு படித்து 12ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.