பிரதமர் மோடி ஒரு முடிவு எடுத்துவிட்டால் பின்பு அவரே கேட்கமாட்டார் என்றார்களே.. அமித்ஷா இரும்பு மனிதர் என்றார்களே.. இப்போது விவசாயிகளின் உறுதியின் முன்னால் சர்வாதிகாரம் சரணாகதி அடைந்துவிட்டதாக நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த ஓராண்டுக்கு முன்பு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஓராண்டாக தொடர் போராட்டம் வெடித்தது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களின் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
அதுமட்டுமின்றி இந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி `டெல்லி சலோ’ என்ற மாபெரும் விவசாயிகள் பேரணியும் நடைபெற்றது. பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்றும், விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்;
பாஜக கொண்டுவந்த வேளாண் சட்டங்களை ஆதரித்தது அதிமுக. அதை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் திமுக அரசு கொண்டுவந்த தீர்மானத்தையும் அதிமுக எதிர்த்தது.
இப்போது, சட்டத்தை கொண்டுவந்த பாஜகவே, பின்வாங்கிவிட்டது. அதன் பின்னால் சென்ற அதிமுக அம்பலப்பட்டு நிற்கிறது.
மேலும் மற்றோரு பதிவில்;
ஒரு முடிவு எடுத்துவிட்டால் மோடி பேச்சை பின்பு அவரே கேட்கமாட்டார் என்றார்கள். அசைக்க முடியாத இரும்பு மனிதர் அமித்ஷா என்றார்கள். ஆனால் விவசாயிகளின் உறுதியின் முன்னால் சர்வாதிகாரம் சரணாகதி அடைந்தது. போராடியவர்களை சந்திக்க மறுத்த மோடி, தேர்தலை சந்தித்தாக வேண்டுமே!” என்று பதிவிட்டுள்ளார்.