மத்திய அமைச்சர் மற்றும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல், நடிகர் விஜயை இதுவரை சந்திக்கவோ அல்லது அவருடன் பேசவோ இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான் தமிழ்நாட்டில் போட்டியிடுகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே மாநிலத்தில் எந்த வகையான அரசு அமையும் என்பது தெளிவாகும்.தவெக தலைவர் விஜயை இதுவரை சந்தித்ததில்லை, அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும் தவெகவுடன் கூட்டணி அமைப்பது எந்த வகையிலும் பயனளிக்காது என்பதையும் கட்சி தலைமை ஏற்கனவே புரிந்துள்ளது எனவும் கூறினார்.
விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக கூறி வருவது குறித்து கருத்து தெரிவித்த பியூஷ் கோயல், அனுபவம் வாய்ந்த தலைவர் எடப்பாடி பழனிசாமி, விஜயுடன் கூட்டணி அமைப்பது போன்ற ஆபத்தான முடிவை எடுக்க மாட்டார் என்று தெரிவித்தார்.
சில தொகுதிகளில் மட்டுமே வலுவாக உள்ள கட்சியுடன் கூட்டணி அமைப்பது சரியான முடிவு அல்ல என்றும் அவர் கூறினார். விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டார்
அவரது அரசியல் பேச்சுகள் மக்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை உருவாக்கவில்லை என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக மக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியையே ஆதரிப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

