itamiltv.com

வானதி சீனிவாசனுக்கு ஐசியுவில் தீவிர சிகிச்சை.. வெளியான மருத்துவ அறிக்கை!

பாஜக எம்.எல்.ஏ.வும் கோவை வடக்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன், வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன், கடந்த சில நாட்களாக தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு 48 மணி நேரம் ஓய்வு அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அவரது தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வலது காலில் ஏற்பட்ட தொற்றுக்காக ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, ஒரு மருந்திற்கு லேசான அலர்ஜி ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐசியு பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

தற்போது அவர் விழிப்புடன் இருந்து, பேசக்கூடிய நிலையில் நலமாக உள்ளார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version