கர்மவீரர் காமராஜர் கட்டிய அணைகள்தான் இன்றும் தமிழகத்தில் விவசாயத்திற்கு உயிர்நாடி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
பெருந்தலைவர், கர்ம வீரர் ஐயா காமராஜர் அவர்களது நினைவுதினம் இன்று. கல்வி, விவசாயம், சமூக மேம்பாடு என அனைத்துத் துறைகளிலும் தொலை நோக்குத் திட்டங்கள் தீட்டி, புதிய தமிழகத்தை உருவாக்கிய சிற்பி.
சுதந்திரப் போராட்டத்தில் ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்த தலைசிறந்த தேசியவாதி. தமது ஒன்பது ஆண்டு கால ஆட்சிக் காலத்தில், 12,000 புதிய பள்ளிகளைத் திறந்து, மதிய உணவும் வழங்கி, இன்றைய தமிழகத்தின் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட படிக்காத மேதை. கர்மவீரர் கட்டிய அணைகள்தான் இன்றும் தமிழகத்தில் விவசாயத்திற்கு உயிர்நாடி.
நெய்வேலி நிலக்கரி நிறுவனம், திருச்சி பெல் நிறுவனம், மணலி சுத்திகரிப்பு ஆலை, காகித ஆலைகள், சர்க்கரை ஆலைகள், ரசாயன ஆலைகள், சிமெண்ட் ஆலைகள் என பல நிறுவனங்களை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கியவர்.
ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஏழைப் பங்காளர் ஐயா காமராஜர் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும் என அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.