அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தீபாவளியான இன்று வெளியான இத்திரைப்படத்தை பார்த்த பலரும் பலகோணங்களில் படம் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தை பொறுத்தவரையில் எதார்த்தமான விமர்சனம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்..!
படத்தில் காளையன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ரஜினிகாந்த். தனக்கே உரிய பாணியில் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். ஊர் மக்களுக்கு போராடுவது, தங்கை மீது பாசம் காட்டுவது, எதிரிகளை துவம்சம் செய்வது, நயன்தாராவுடன் ரொமான்ஸ் என்று திரையில் ஜொலிக்கிறார்.
தங்கையாக வரும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அண்ணன் மீது பாசம், காமெடி என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
வழக்கறிஞராக வரும் நயன்தாரா, அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். ரஜினியுடன் நடிக்கும் காட்சிகளில் ரசிக்க வைத்து இருக்கிறார். குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். வில்லனாக வரும் ஜெகபதி பாபு கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.
அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும், ரஜினிக்கேற்ற கதைக்களத்துடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சிவா. முதல் பாதியை ரசிகர்களுக்கு ஏற்றவாறு கமர்ஷியலாக கொடுத்து இருக்கிறார். ஆனால், பெரிதாக எடுபடவில்லை என்பதே எதார்த்தம்.
இடைவேளைக்கு 10 நிமிடத்திற்கு முன்பாக கதைக்குள் அழைத்து செல்லும் இயக்குனர், பிற்பாதியில் ரசிகர்களை கட்டிப் போட முயற்சி செய்திருக்கிறார். தேவையில்லாதகாட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது.