Armstrong’s murder : சென்னை – பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர படுகொலையின் பின்னணியில் உள்ள பரபரப்பு தகவல்கள் கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளன.
சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் வழக்கறிஞரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவருமான ஆம்ஸ்ட்ராங் (52). இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு 7.15 மணியளவில் தனது வீட்டின் வெளியே அண்ணன் வீரமணி (65), பாலாஜி (53) ஆகியோருடன் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது தனியார் உணவு டெலிவரி கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர்கள் போல அதே சீருடையில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி வந்தது. வழக்கமாக உஷாராக இருக்கும் ஆம்ஸ்ட்ராங், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் என்று நினைத்து அசால்டாக நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த கும்பல் திடீரென ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்த தாக்குதலில் அவருக்கு பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரை காப்பாற்ற வந்த அவரது அண்ணன் வீரமணி, மற்றொருவரான பாலாஜி ஆகியோருக்கு தலை மற்றும் காலில் வெட்டு விழுந்தது. இத்தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அருள்தாஸ் என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது வீடு உள்ள பகுதி மற்றும் அப்போலோ மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவரது உடல் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போதைய தகவலாக உடற்கூறாய்வு முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் அவரது வீடு உள்ள பகுதி மற்றும் மருத்துவமனையில் அவரது ஆதரவாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரம்பூரை சுற்றிய பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தக் கொலை சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க், இணை கமிஷனர் அபிஷேக் தீக்சித், துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் ராஜா ஆகியோர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கொலையாளிகள் குறித்த அடையாளங்களை போலீசார் சேகரித்து வந்த நிலையில், அவர்களை அப்பகுதியிலிருந்த ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இக்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை (Armstrong’s murder) சம்பவத்திற்கும் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் தொடர்பிருப்பது கைதானவர்கள் வாக்குமூலம் வாயிலாக தற்போது தெரிய வந்துள்ளன.
ஆம்ஸ்ட்ராங்கின் பின்னணியை பொறுத்தவரை, அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருந்துள்ளன. ரவுடிகள் பட்டியலில் அவரும் இருந்துள்ளார். பின்னர் அதில் இருந்து முற்றிலும் விலகி, பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். 2012ல் அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. மாயாவதிக்கு நெருக்கமானவராக இருந்து வந்தார். இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : ஆம்ஸ்ட்ராங் படுகொலை – சரத்குமார் இரங்கல்!
இந்தக் கொலையில், டெய்லர் செந்தில், ஜான் கென்னடி, ஜெயசந்திரன், சைதை சந்துரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது பாம் சரவணன் என்ற ரவுடியும் சம்பவ இடத்துக்கு வந்தது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். பாம்சரவணனுடன், ஆம்ஸ்ட்ராங்கும், காரில் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்ததாகவும், காரில் அவர் இருப்பதுபோல காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில், ஆம்ஸ்ட்ராங்க் கைது செய்யப்படவில்லை.
அவருக்கும் வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி அஞ்சலை மகன் பாலு, முருகேசேன் ஆகியோர் பழிதீர்க்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங்க்கை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் 3 பேருமே தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என யூகிக்கப்பட்ட நிலையில், கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலம் அதனை உறுதி செய்யும் வகையிலும் அதிர்ச்சியூட்டும் வகையிலும் உள்ளன.
அதாவது, கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும்; ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளிலேயே திட்டம் நிறைவேறியதாகவும் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். தற்போது சிறையில் உள்ள வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி, இந்தக் கொலைக்கு உடந்தையாகவும், ஆதரவாகவும் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்திற்கு முன்பே, ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை (Armstrong’s murder) சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது திட்டமிட்ட அரசியல் படுகொலை என்பதால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் அவசர மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்ஹசர் முக ஸ்டாலின், “பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்படும்” என உறுதியளித்துள்ளார். மேலும் அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல்களை கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளதோடு, அவரது ஆதரவாளர்களின் போராட்டங்கள் மற்றும் கடை அடைப்புகளால் வட சென்னையே ஸ்தம்பித்து போயுள்ளது.