பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கொலை வழக்கில் தேமுதிகவை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி மாலை அவர் புதிதாக கட்டிவரும் வீட்டின் முன் மர்மநபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .
தமிழகத்தை உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்பட்ட ரவுடி திருவேங்கடம் கடத்த சில தினங்களுக்கு முன் போலீசாரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் .
இந்த கொடூர கொலை சம்பவத்தில் அடுத்தடுத்து பல ரவுடிகள் கைதாகி வரும் நிலையில், அவர்கள் திமுக, பாஜக, அதிமுக போன்ற கட்சிகளின் பிரமுகர்களாக இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் ஜோ பைடன்..!!
இந்நிலையில் நேற்று திருவள்ளூரைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி மணிகண்டனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கும் தொடர்பிருப்பதாக சொல்வதா? என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அனைத்து கட்சியினரையும் விசாரணை வலைக்குள் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு காவல்துறை செயல்படுகிறது என தகவல் வருகிறது. தேமுதிகவை சேர்ந்த திருவள்ளூர் நகர செயலாளர் மணிகண்டனுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுவது முற்றிலும் தவறான செய்தி.
விசாரணை என்ற பெயரில் போலீசார் அழைத்துப் பேசியுள்ளனர். விசாரணையில் எதுவும் நிரூபிக்கப்படாததால் அவரை இந்த வழக்கில் உட்படுத்தாமல் அனுப்பிவிட்டனர். இதுதான் நேற்று நடந்திருக்கிறது. அதற்குள் தேமுதிகவிற்கும் தொடர்பு இருக்கிறது என்ற முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல் அளித்த எந்த தொலைக்காட்சியாக இருந்தாலும் இது கண்டிக்கதக்கது என பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.