19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் கடந்த 25 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய நிலையில், வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ள வீரர் வீராங்கனைகள் தங்களது திறமைகளை உலகிற்கு காட்டும் வகையில் பல பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர் .
இதில் குண்டு எறிதல் பிரிவில் 20.36 மீட்டர் எறிந்து, தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் . இதற்கு முன் 2018ல் நடந்த ஆசிய விளையாட்டிலும் அவர் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் இந்திய வீரர் அவினாஷ் சாப்லே . இதற்கு முன் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற அவினாஷ் சாப்லே, ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய சார்பில் பங்கேற்ற முரளி ஸ்ரீசங்கர் 8.19 மீட்டர் தாண்டி வெள்ளி வென்று அசத்தியுள்ளார். இதுமட்டுமல்லாமல் 1978ம் ஆண்டுக்கு பிறகு ஆசிய விளையாட்டில் நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்றவர் என்ற பெருமையையும் முரளி ஸ்ரீசங்கர் பெற்றுள்ளார்.
இதையடுத்து நடைபெற்ற 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை அஜய் குமார் சரோஜ் மற்றும் ஜின்சன் ஜான்சன் ஆகியோர் வென்று அசத்தியுள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 13 தங்கம், 21 வெள்ளி, 19 வெண்கலம் என 53 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணி தற்போது 4 வது இடத்தில் உள்ளது.