ஆஸ்திரேலியாவில் கங்காருகளின் (kangaroos) எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு கங்காருகள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கங்காருகள் பட்டினியால் இறப்பதற்கு முன் அவற்றை சுட்டுக் கொல்ல ஆஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கங்காருக்களின் (kangaroos) எண்ணிக்கையை கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், அவை பேரழிவை சந்திக்கக்கூடும் என்று சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கங்காருக்களை ஆஸ்திரேலியாவின் அடையாளமாக கருதினாலும், அந்நாட்டிற்குள் கங்காரு இனம் பெரிய சுற்றுச்சூழல் தலைவலியாகவே உள்ளது. கங்காரு, மிக வேகமாகவும் மிக அதிகமாகவும் இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஒரு இனம்.
பொதுவாக, கங்காருக்கள் மழை காலத்தில் தீவனம் அதிகமாக கிடைக்கும் போது, அவற்றின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரிக்கும். கங்காருகள், மிக வேகமாக வயல்வெளிகளை சூறையாட கூடியது.
அதே நேரம், உணவு தீர்ந்துவிட்டால் அவை கூட்டம் கூட்டமாக பட்டினியால் இறந்துவிடும் என்று சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவில் கங்காருக்கள் பட்டினியால் உயிரிழக்கின்றனர் எனவும், பசியால் பொது கழிப்பறைகளுக்குச் சென்று அங்குள்ள கழிப்பறை காகிதங்களை சாப்பிடுகின்றன அல்லது பசியுடன் சாலையில் படுத்துக் கொள்கின்றன என கூறுகின்றனர்.
மேலும், கடந்த முறை இதேபோன்று வறட்சி ஏற்பட்டபோது, 80-90% கங்காருக்கள் பட்டினியால் இறந்துவிட்டதாகவும், தற்போது மீண்டும் அதே நிலை ஏற்படாமல் இருக்க அவற்றை சுட்டுக் கொல்லவும் ஆஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.