ITamilTv

சாதிக்கும் ஆட்டிச குழந்தைகள்! – ஆட்டிசம் அதிகரிக்கக் காரணங்கள்!

Spread the love

உயிரி தொழில் நுட்பத்துறையில் பேராசிரியரான சுதாகர் சிவசுப்பிரமணியம், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.

அதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்போது பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

autistic child
பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்

ஆட்டிசம் பற்றி பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆட்டிசம் (Autism) குறித்து 2003 -ல் ஆராயத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளைப் பற்றி 2 கட்டுரைகள் எழுதியிருந்தார்.

அதில், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சில தனித்துவமிக்க திறமைகள் இருக்கும். அவற்றைக் கண்டறிந்து வளர்த்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கௌரவமான ஒரு வாழ்க்கையை உருவாக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அருமையாகக் காந்தக் குரலில் பாடும் ஆட்டிசம் பாதித்த ஒரு பெண் குழந்தை தந்தையால் கைவிடப்பட்டு தாயால் வளர்க்கப்பட்டுப் பல திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

முதுகலை இசை வகுப்பில் முதல் மாணவியாக வந்தார்! அத்தனை புகழும் பெருமையும் அந்தக் குழந்தையின் அம்மாவையே சேரும்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அழகுமிகு வண்ண ஓவியங்கள் தீட்டச் சொல்லிக் கொடுத்து ஜனாதிபதி விருது வாங்கும் அளவிற்கு உயர்த்திய பெற்றோரும் உண்டு.

ஆட்டிசம் பாதித்த தன் மகனைப் படிக்கவைத்து, பிரபல தனியார் பொறியியல் கல்லூரியின் நூலகத்தில் பணிபுரியும் அளவிற்கு உயர்த்தி “தேசிய சாதனையாளர் விருது” பெறவைத்த தாயும் உண்டு!

ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் தங்களுக்குப் பிடித்ததைத் திரும்பத் திரும்பச் சளைக்காமல் செய்வதனால் தேசிய அளவில் ஏன் உலக அளவில் கூட இவர்கள் சுலபமாக, அவர்களுக்குப் பிடித்த துறையில் உயர்ந்துவிடுகிறனர்.

ஆனால், அவர்களுக்கு ஒரு வழிகாட்டி கட்டாயம் வேண்டும். தனியாக அவர்களால் சாதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நோய் எதனால் வருகிறது எனச் சரியாகக் கண்டறியப்படவில்லை. இதுவாக இருக்கலாம், அதுவாக இருக்கலாம் எனப் பல காரணங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்குப் பார்க்கலாம்:

1. குடலில் வலிரிக் அமிலம் (Valeric acid) மற்றும் டாரின் (Taurine) என்ற வேதிப் பொருள்களை உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகள் இல்லாததால் ஆட்டிசம் வருகிறது என எலிகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டறியப்பட்டுள்ளது.

2. கர்ப்பகாலத்தில் பூச்சிக் கொல்லி போன்ற கேடு விளைவிக்கும் வேதிப்பொருள்கள் அடங்கிய காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடுவதால் வருகிறது எனவும் ஆராய்ச்சி குறிப்புகள் அறிவுறுத்துகின்றன.

3. கர்ப்பகாலத்தில் உடலுக்கு ஒவ்வாத மெர்குரி, காரீயம் போன்ற அணுக்கள் அடங்கிய உணவு மற்றும் தண்ணீரும் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

4. கர்ப்பகாலத்தில் வரும் சில வைரஸ் தாக்கத்தால் இந்த நோய் வருகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

5. இது ஒரு மரபணு நோய் எனவும் சில ஆராய்ச்சிக் குறிப்புகள் சொல்கின்றன.

6. MMR என்ற நோய் தடுப்பூசி மேல் குற்றம் சாட்டப்பட்டு பின் தடுப்பூசிக்கும் ஆட்டிசத்திற்கும் தொடர்பில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

7. இயல்பாகப் பிறந்த குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு குறைவு எனவும் அறுவை சிகிச்சை முறையில் ( C-Section) பிறந்த குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இயல்பான பிறப்பின்போது ஏற்படும் அதீத அழுத்தம் காரணமாகக் குழந்தையின் உடலில் குறிப்பாக முளைக்கு ரத்த ஓட்டம் வலுவடைவதாகக் கருதப்படுகிறது.

இந்த வாய்ப்பு அறுவை சிகிச்சை முறையில் பிறந்த குழந்தைகளுக்கு இல்லை. எனவே அறுவை சிகிச்சை முறையில் பிறந்த சில குழந்தைகள் பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

8. தொலைக்காட்சி மற்றும் கைப்பேசி வருகைக்குப் பின்னர் இந்த நோய் அதிகமாகியுள்ளது எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நோய்க்கான காரணம் மற்றும் மருந்து கண்டறிவது சிக்கலான செயலாக உள்ளது. மேலும், இது ஒரு உலகளாவிய பெரும் பிரச்சனை.

இந்த விஞ்ஞான காலத்தில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் பிறப்பு அதிகரித்து வருகிறது. இதற்கான தீர்வு குறித்து ஆராய்ச்சியாளர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.


Spread the love
Exit mobile version