Avian flu : பறவைக் காய்ச்சல் எதிரொலி… பீதியில் நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள்… தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு!
கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்புக் கால்நடை பராமரிப்புக் குழுவினர் மூலம் கண்காணிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
கடந்த சில நாட்களாகக் கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான வாத்துகள், கோழிகள் தொற்றுப் பாதிப்பு காரணமாக உயிரிழந்தன.
இந்நிலையில், ஆலப்புழா மாவட்டம் குட்டநாட்டில் உள்ள வாத்து பண்ணைகளில் ஏராளமான வாத்துகள் கடந்த வாரம் உயிரிழந்தன. இறந்த வாத்துகளின் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க : 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது ஆர்சிபி!
ஆய்வின் முடிவில், எச் 5 என்1 என்ற பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, கேரளாவில் பறவைக் காய்ச்சல் Avian flu தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல், தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரளா – தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சிறப்புக் கால்நடை பராமரிப்புக் குழுவினர் மூலம் கண்காணிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த சிறப்புக் கால்நடை பராமரிப்புக் குழுவில் கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், 2 கால்நடைப் பராமரிப்பு உதவியாளர்கள் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சிறப்புக் கால்நடை பராமரிப்புக் குழுவினரின் ஒப்புதல் பெற்ற பின்னரே வாகனங்கள் எல்லைப் பகுதியில் அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாகக் கோழி, வாத்துகளைக் கொண்டுவரும் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது.
தமிழகத்திலிருந்து கேரளா சென்றுவிட்டு வரும் கோழிப்பண்ணை சார்ந்த வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே வாகனம் அனுமதிக்கப்படுகிறது.
நாமக்கல் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இதனால் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் பீதியில் உள்ளனர்.
இதையும் படிங்க : சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!