மதுரை – திண்டுக்கல் நெடுஞ்சாலையில், இரு சக்கர வாகனதில் சென்றுகொண்டிருந்த நபர், விபத்தை தடுப்பதற்காக போலீசார் வைத்திருந்த பேரிகார்டில் (Barricade) மோதி கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கியதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில், விபத்துக்களை தடுப்பதற்காக இரு பேரிகார்டுகளை (Barricade) போலீசார் வைத்துள்ளனர். இந்நிலையில், வியாழக்கிழமை அன்று காலை இந்த சாலை வழியாக அரசு கேபிள் டிவி ஊழியர் தமிழரசன் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையில் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டின் நடுவில் சாலையை கடக்க முயன்ற போது கண்டெய்னர் லாரி மீது உரசி நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், கண்டெய்னர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய தமிழரசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
இந்த விபத்தில் காயமடைந்த அவரது மனைவியும், குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்தின் போது இருசக்கர வாகனத்தின் பின்னால் சென்று கொண்டிருந்த ஒரு காரின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இந்த விபத்து குறித்த காட்சி பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், விரைவாக செல்வதற்கு ஏதுவாக சாலை அமைத்துவிட்டு, சாலையில் வேகத்தை குறைக்க பேரிகார்டும் வைத்து விபத்து ஏற்பட காரணமான போலீசார் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.