புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு 18.06.2024 அன்று முதல் நடைபெற்று வருகிறது. கண்ணாடி மணிகள் (glass beads), மாவுக் கல் மணிகள் (soap stone beads) , பளிங்கு கல் மணிகள் (Crystal beads), உட்பட 519 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இன்று இரண்டு சூதுபவள மணிகளும் அகேட் வகை கல்மணி ஒன்றும் செவ்வந்தி நிற கல் மணி (Amethyst) ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளன.
சங்ககாலம் என்கிற தொடக்க வரலாற்றுக் கால தொல்லியல் தளங்களான அரிக்கமேடு, பூம்புகார், கொடுமணல், தாண்டிக்குடி, பொருந்தல், கீழடி, கொற்கை போன்ற இடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் கிடைக்கப்பெற்றுள்ளன.
Also Read : வாக்களிக்காமல் போனதால் தமிழக மக்களை பழிவாங்கிய பாஜக – சீமான்
சூதுபவளம் மற்றும் அகேட் கல்மணிகள் செய்யக்கூடிய மூலக்கற்கள் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் கிடைக்கின்றன.
அண்மையில் செம்பு ஆணிகளும் கண்ணிற்கு மை தீட்டும் அஞ்சணக்கோல் கிடைத்துள்ள நிலையில் இன்று சூதுபவள மணிகளும் அகேட் வகை மணிகளும் கிடைத்துள்ளது சிறப்பாகும். இந்த கண்டுபிடிப்பு பொற்பனைக்கோட்டையின் பண்பாட்டுச் செழுமையை உறுதிசெய்கின்றன.
மணியில் துளையிடத் தொடங்கி முழுமை அடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பது காணப்படுகிறது.
முழுமையானதாகவும், முழுமை பெறாத நிலையிலும் கிடைத்துள்ள இந்த மணிகள், பொற்பனைக்கோட்டையில் மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம் இருந்ததற்கான சான்றாக விளங்குகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.