Site icon itamiltv.com

பிரதமர் வருகைக்குப் பிறகு திமுக காணாமல் போய்விடும்..- பாஜக அட்டாக்!

பிரதமர் நரேந்திர மோடியின் கன்னியாகுமரி வருகைக்குப் பிறகு, திமுக கடல் நீரில் கரைந்த பெருங்காயம் போல தடயமே இல்லாமல் மறைந்து போகும் என்று தமிழக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: உலகம் இதுவரை காணாத அளவுக்கு மக்கள் விரோதமும் ஊழலும் நிறைந்த ஆட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

மதுரை, திருச்சி மற்றும் மதுராந்தகம் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை ஏன் பதில் அளிக்கவில்லை? தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்துள்ள பல்வேறு திட்டங்களையும் சாதனைகளையும் பிரதமர் பட்டியலிட்டு உள்ளார்.

ஆனால், “மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை” என்று தினமும் தவறான தகவல்களை பரப்பும் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் முன்வைத்த புள்ளிவிவரங்களுக்கு பதில் சொல்லத் தயாரா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், வரும் 15ஆம் தேதி பிரதமர் மோடி நாகர்கோவில் வருகை தர உள்ள நிலையில், அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று பெண்கள் இறைவன் முன்னிலையில் சபதம் எடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகைக்குப் பிறகு திமுக என்ற கட்சி அரசியல் களத்தில் இருந்து மறைந்து போகும் என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Exit mobile version