சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.
நேற்று காலை 6.30 மணிக்கு சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் எதிர்முனையில் பேசிய நபர், சென்டிரல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், வெடிகுண்டு சரியாக 8 மணிக்கு வெடித்து விடும் என்றும் கூறிவிட்டு உடனே தொடர்பை துண்டித்துள்ளார்.
அதையடுத்து, இந்த தொலைபேசி அழைப்பு குறித்து உடனடியாக சென்டிரல் ரெயில்வே போலீசாருக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் ரெயில்வே போலீசார், பூக்கடை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு துறையினர் மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர்.
ஆனால், சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காத நிலையில், அது வெறும் புரளி எனத் தெரியவந்ததையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் 21 வயது இளைஞர் மணிகண்டன் என்பது தெரியவந்தது. மேலும், மணிகண்டன்மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதும், இந்நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்த செல்போனை எடுத்து வந்து கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி மற்றும் ஜூன் 21 ஆகிய தேதிகளில் மணிகண்டன் சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்த நிலையில், நேற்று மீண்டும் 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மணிகண்டனின் பெற்றோரிடம் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.