ஐ தமிழ் ஆன்மிக நேயர்களுக்கு சிவ வணக்கம்.
” பிறவியிலேயே பேசும் திறன் இல்லாதவரா….
சரளமாக பேசமுடியாத திக்குவாய் பிரச்னை உள்ளவரா…..
ஏதேனும் விபத்தில் அல்லது பக்கவாதம் போன்ற நோயில் சிக்கி தெளிவாக பேச இயலாதவரா…”
அப்படியானால் அவர்கள் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுதான் !
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலுள்ள திருக்கோலக்கா ஸ்ரீ ஓசையாயகி சமேத ஸ்ரீ தாளபுரீஸ்வரர் திருத்தலம் தான் மனிதர்க்கு தடைபட்ட பேச்சுத் திறனை அருள்பாலிக்கக்கூடியது. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்திற்கு உங்களை அழைத்துச் செல்வதில் ஐ தமிழ் தாய் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது.
இத்தலத்து ஈசனுக்கு தாளத்தின் நாமம் .தாளத்திற்கு ஓசை கொடுத்ததால் இறைவிக்கு ஓசைகொடுத்த நாயகி என்ற நாமம். “தாளத்திற்கே ஓசை தந்தவள் மனிதர்க்கு பேசும் ஓசை தந்தருள்வதில் வியப்பில்லை” என்கிறது தலவரலாறு.
அந்த சிலிர்பான வரலாறு என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.
சீர்காழியில் பிறந்த திருஞானசம்பந்தர், மூன்று வயதிலேயே உமையம்மை ஊட்டிய ஞானப்பால் உண்டு , ஞானம் பெற்று,
“தோடுடைய செவியன் விடையேறி…..” என
தேவாரம் பாடினார்.
மறுநாள் காலை தந்தையுடன் சீர்காழிக்கு மேற்கு திசையிலுள்ள திருக்கோலக்கா ஈசனை தரிசிக்க சென்றார். கொன்றைக்காடாக இருந்தமையால் அந்த ஆலயத்தை அறிய முடியாமல் திகைத்தவருக்கு, விநாயகப் பெருமான் தோன்றி வழி காட்டினார். ஆலயத்திற்கு முன்னுள்ள தாமரை மலர்கள் நிறைந்த திருக்குளத்தில் , வாளைமீன்கள் துள்ளி பாய்வதையும், மாதர்கள் நீராடியதையும கண்டதும்,
“மடையில் வாளைபாய மாதரார்
குடையும் பொய்கை கோலக்கா வுளான் “
என்று பாடிக் கொண்டே சென்றார்.
அடுத்து இறைவனை கண்டதும் உளம்புரித்து போய் ,
“சடையும் பிறையுஞ் சாம்பர்கீழ்பூச்சும்
உடையுங்கொண்ட
உருவமென் கொலோ”
-என்று கைகளால் தாளம் போட்டுப்பாட, ‘குழந்தையின் கைகள் நோகுமே’ என்று இறைவன் தம் ஐந்தெழுத்து எழுதிய செம்பொன்னாலான தாளங்களை அருளி செய்தார்.
பொற்றாளங்களுக்கு அழகும், மதிப்பும் கூடுமே தவிர ,ஒலி இருக்காது. எனவே அந்த பொற்றாளங்களுக்கு இறைவி ஓசை கொடுத்தருளினாள்.அப்படி ஓசை கொடுத்ததால் இத்தல இறைவி
‘ஓசை கொடுத்த நாயகி என்றழைக்கப்படுகிறாள்.
ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற இந்த நிகழ்வை ஒன்பதாம் நூற்றாண்டில் அவதரித்த சுந்தரமூர்த்தி நாயனார் தாம் பாடிய இத்தல பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமயக்குரவர்கள் திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலமிது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாலயத்தில் வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு கிடைக்கும் பலன்கள்
என்ன ?
ஆலய குருக்கள் கார்த்திகேயனிடம் கேட்டோம்.
“திருமணம் தடைபட்டவர்கள் மஞ்சள் பொடியினால் திங்கள் கிழமைகளில் இத்தலத்தில் உள்ள மகாலட்சுமிக்கு 11 வாரங்கள் தொடர்ந்துஅர்ச்சனை செய்திட, ,அதற்குள்ளாகவே வேண்டுவோர்க்கு திருமணம் நடை பெற்று வருவது அனுபவமாக உள்ளது.
பள்ளி ,கல்லூரி மற்றும் அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் எழுதி தோல்வியுற்றவர்கள், அடுத்த தேர்வுக்கு செல்லும் முன், இங்குள்ள சரஸ்வதி மூல மந்திரத்தில் திரிசதி அர்ச்சனை
ஓசை கொடுத்த நாயகி அம்பாளுக்கு, பால் அன்னம் நிவேதனம் செய்து வழிபட்டால் மறு தேர்வில் வெற்றி பெறுவது உறுதி.
வறுமையில் வாடுபவர்கள் ஸ்ரீ லட்சுமி மூல மந்திரத்துடன் திருசதி அர்ச்சனை அம்பாளுக்கு செய்து, சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து வழிபட, குறிப்பிட்ட காரியம் நிறைவேறி செல்வம் கிடைத்து வறுமை நீங்கும்.
பத்து வயது வரை பேச்சு வராத குழந்தைக்கு மருத்துவம் ,மாந்திரீகம் என பல வகையில் அலைந்து கொண்டிருந்த தம்பதிக்கு சிவ பக்தர் ஒருவர் “ஜடப்பொருளான தாளத்திற்கு ஒலி கொடுத்தவள் சீர்காழி அருகேயுள்ள திருக்கோலக்கா திருத்தலத்தில் வீற்றிருக்கிறாள்.
அவள் உயிருள்ள உங்கள் மகனுக்கும் ஓசை ஒலி கொடுப்பாள்” என்று கூறியதை தெய்வ வாக்காக ஏற்றுக்கொண்டு மறுநாளே இத்தலத்தில் வந்து வெண்கல மணி கட்டி ஓசை எழுப்பி அம்பாளிடம் “எங்கள் மகனுக்கு பேச்சு வரவேண்டும்” என்று மனதார பிரார்த்தனை செய்தார்கள். மறுநாள் அதிகாலையில் எழுந்த மகன் “அம்மா” என்று பேச ஆரம்பித்தவுடன் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இது இத்தலத்து இறைவன் தரும் அருள்பிரசாதம். இச்சம்பவம் நடந்தது 1979 ம் ஆண்டு. அன்று முதல் இன்று வரை சுமார் 1800 குழந்தைகளுக்கு மேல் பேசும் பாக்கியம் கிடைத்து பலன் அடைந்திருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு பேச்சு வந்த விபரத்தை அவர்கள் கையாலேயே எழுதி வைத்துள்ளனர். அதனை ஆலய பார்வையாளர் புத்தகத்தில் இன்றும் காணலாம் ” என்றார்.
மீண்டும் ஓர் அற்புத தலத்தில் சந்திக்கும் வரையில் உங்களிடமிருந்து விடைபெறுவது ஐ தமிழ்.