“தினமும் திருக்கடவூர் அபிராமி அபிஷேகத்திற்கு, கங்கை நீர் அருளும் தலம் இதுதான் !”
மகத்தான தலங்களைத் தரிசிப்பதில் சிறப்பான பங்களிப்பு தரும் ஐ தமிழ் நேயர்களுக்கு பணிவான வணக்கம்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் ஸ்ரீ நிமலகுஜாம்பிகை சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பர்,சுந்தரர், சம்மந்தர் ஆகியோரால் பாடல்பெற்ற, பழைமைவாய்ந்த இத்திருத்தலத்திற்கு உங்களை அழைத்துச் செல்வதில், ஐ தமிழ் பெருமை கொள்கிறது.
“ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சிவன், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில், படைப்புக் கடவுளான பிரம்மாவும் அழிந்து போவார். புது யுகம் துவங்கும்போது, மீண்டும் பிரம்மாவை உண்டாக்கி, அவர் மூலமாக ஜீவராசிகள் பிறக்கும்படி செய்வார்.
அவ்வாறு பிரம்மாவை அழித்து, மீண்டும் உயிர்ப்பித்த தலம் இது. அதோடு, பிரம்மாவுக்கு உயிர்களை படைக்கும் இரகசியம் பற்றி இங்கு ஞான உபதேசம் செய்தருளினார். “பிரம்மபுரீஸ்வரர்” என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார்.
பிரம்மாவை அழித்து ஞானம் உபதேசித்த தலமென்பதால், “கடவூர் மயானம்” என்றும், “திருமெய்ஞானம்” என்றும் இத்தலத்திற்கு பெயர்கள் உண்டு.
“பஞ்ச மயானங்கள் ” என்றழைக்கப்படுகி்ன்ற தலங்கள் ஐந்து .அவைகள் முறையே காசி மயானம், கச்சி மயானம், காழி மயானம், நாலூர் மயானம், கடவூர் மயானம் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஐந்தாவதாக உள்ள திருத்தலம்தான் இந்தக் கடவூர் மயானம்.
இத்தலத்தில் கிழக்கு நோக்கி தனிக்கோயில் கொண்டு வீற்றிருக்கிறாள் ஸ்ரீ நிமலகுஜாம்பிகை. இந்த அம்பிகையின் திருகரங்களில் தாமரை மலர்கள் கொண்டுள்ளதால், சரஸ்வதியும், லட்சுமியும் பார்வதியும் இவள்தான் என்று தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இந்த அம்பாளை வழிபட்டால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்’ என்று நாடி ஜோதிடம் கூறுகிறது
வள்ளி, தெய்வானையுடன் ‘சிங்காரவேலர்’ என்ற திருநாமத்துடன் முருகப் பெருமான் இங்கு வீற்றிருக்கிறார். இவரது சந்நதி, விமானத்துடன் கூடிய தனி மண்டப அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது. இவர் போருக்குச் செல்லும் கோலத்தில் கைகளில் வேல் மற்றும் வில்லேந்தி, கழுத்தில் உருத்ராட்ச மாலை, பாதத்தில் குறடு (காலணி) அணிந்து காட்சி தருகிறார்.
ஒரு சமயம் மௌரியர்கள் ஆட்சி காலத்தில் பாகுலேயர் என்ற மன்னன் எதிரிப்படையுடன் போரிட நேர்ந்தபோது தோல்வியுற்று, இத்தலத்து சிங்காரவேலனிடம் சரணடைந்தார். அம்மன்னனுக்காக, முருகப்பெருமான் படைத்தளபதியாக தலைமையேற்று போர்புரிந்து, எதிரிப் படையை வீழச்செய்தார்.
அதன்பின் ” நீ இழந்த நாடு நகரம் மக்களை மீட்டு தந்தோம். மீண்டும் அரசோச்சுக” என்று அசரீரியாய் பெருமான் அருளினார்.
அதனைக் கேட்ட மன்னன் எல்லையில்லா மகிழ்ச்சியுற்று, இத்தலத்து சிங்காரவேலவ பெருமானுக்கு காணிக்கையாக 53 ஏக்கர் பரப்பளவுடைய நன்செய் நிலத்தை வழங்கி, அதற்கு ‘சிங்காரவேலி’ என்ற பெயரும் வைத்தான். இன்றும் அந்நிலத்திற்கு சிங்காரவேலி என்ற பெயரே வழங்கப்படுகிறது.
சிவசந்நதியின் ஒருபுறத்தில் சண்டிகேஸ்வரர் இருப்பது போல, இந்த முருகனுக்கும் ஒரு சண்டிகேஸ்வரர் இருப்பது இத்தலத்தின் சிறப்பு. இவரை, “குக சண்டிகேஸ்வரர்” என்கின்றனர்.
இதையும் படிங்க : கடக ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய சோமநாத சுவாமி திருக்கோயில்!!
விநாயகர், பெரிய வயிறுடன்தான் இருப்பார். இக்கோயிலில் இவர் ஒட்டிய வயிறுடன் காட்சி தருகிறார். இவரை, “பிரணவ விநாயகர்” என்றழைக்கிறார்கள். ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமான முருகனையும், பிரணவ விநாயகரையும் இங்கு தரிசிப்பது விசேஷம்.
படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு சிவன் படைப்பின் ரகசியத்தை உபதேசித்த போது, கைகட்டி, மெய்ப்பொத்தி விநாயகரும் உபதேசத்தைக் கேட்டாராம். இதனால், இவர் வயிறு சிறுத்து இருப்பதாகச் சொல்வர். ‘படிக்கிற குழந்தைகள் அடக்கத்துடன் இருக்கவேண்டும் என்ற தத்துவத்தை இதன்மூலம் விநாயகர் உணர்த்துகிறார்’ என்கிறார்கள்.
கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தியுடன் ஆறு சீடர்கள் உள்ளனர்.
ஆயுள் விருத்திக்காக திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனுறையும் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் ஆலயத்தில், ஆயுஷ்ய ஹோமம், சதாபிஷேகம் செய்பவர்கள், இங்குள்ள பிரம்மபுரீஸ்வரருக்கும் பூஜை செய்து வழிபட ஹோமம் பூர்த்தியாகும் என்பது ஐதிகம்.
“மெய்ஞானம் பெற்று பிரம்மபுரீஸ்வரராக வீற்றிருக்கும் இத்தலத்தில் வந்து வழிபட்டால்,கல்வி, கலைகளில் மேன்மை அடையலாம். பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும். எதிரிகள் தொல்லை அகலும்.’ இன்று போய் நாளை வா’ என்று சொல்லாமல், பக்தர்களின் நியாயமான வேண்டுதல்களுக்கு இன்றே அருள் புரிவார் பிரம்மபுரீஸ்வரர் “என்கிறார் சண்முகசுந்தரம் சிவாச்சியார்.
திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரருக்கு நாள்தோறும் இன்று சிவபூஜை செய்யும் மார்க்கண்டேயருக்காக, காசி கங்கா தீர்த்தத்தை வரவழைத்து கொடுத்து அருளினார் இத்தலத்து ஈசன். அன்று முதல் இன்றுவரை 1 கி.மீ தூரத்திலுள்ள திருக்கடையூருக்கு இங்கிருந்துதான் கங்கா தீர்த்தம் எடுத்துச் சென்று தினந்தோறும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
அத்தீர்த்தம் வந்த நாள்….. பங்குனி மாதம் அமாவாசை கழித்த அசுபதி நட்சத்திர நாளாகும். எனவே அந்த நன்னாளை ஆண்டுதோறும் இக்கோயில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.அன்னாளில் பக்தர்கள் அசுபதி தீர்த்தத்தில் புனித நீராடி, புண்ணிய பேறு எய்தி வருகின்றனர்.