Site icon itamiltv.com

பிரச்சாரத்தில் ராமதாஸ் படம் பயன்படுத்தத் தடை கோரி வழக்கு – 18 பேருக்கு நோட்டீஸ்!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்த புதிய வழக்கில் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது எனக் கோரி அவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், அன்புமணி ராமதாஸ் அணியைச் சேர்ந்த 18 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

பாமக கட்சியில் தந்தை-மகன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சி இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்கவும், தானே கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் முன்பு வழக்குகள் தொடர்ந்திருந்தார்.

ஆனால், அவற்றை உரிமையியல் நீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றமும் நிராகரித்திருந்தன.

இந்நிலையில், தற்போது தொடரப்பட்டுள்ள புதிய வழக்கில், அன்புமணி ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும், அவருடன் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோதமாக கட்சி தலைவராக அன்புமணி செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனுடன், தேர்தல் பிரச்சாரங்களில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த அன்புமணி தரப்பைச் சேர்ந்த 18 வேட்பாளர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Exit mobile version