வருகிற 13-ம் தேதி முதல்வர் கூட்டியிருக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில்தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியதாவது..
கடந்த மூன்று ஆண்டுக்கால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
கடந்த ஆண்டு துபாய் சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.6,100 கோடிக்கான முதலீடுகளை ஈர்க்க கையெழுத்திட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் சென்ற முதல்வர் ரூ.3,440 கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். ஆனால், இன்று வரை ஒரு ரூபாய் கூட முதலீடு வந்து சேரவில்லை.
அதுமட்டுமல்லாமல், சென்னையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது எனத் தெரியவில்லை. எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்றும் தெரிவிக்க வேண்டும்.
இடஒதுக்கீடு தொடர்பாக 35 ஆண்டுக்கால வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டில் திமுகவின் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று முடிவெடுத்த திமுக தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது. மாநில அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் இருக்கிறது. இதை உச்ச நீதிமன்றமும், பாட்னா உயர் நீதிமன்றமும் உறுதி செய்து உள்ளன.
தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்ற சட்டத்தை வணிகர்கள் மதிக்க வேண்டும் என்று அமைச்சர் சாமிநாதன் எச்சரித்தும் அதை யாரும் பொருட்படுத்தராமல் இருக்கின்றனர்.
சென்னை, பழவந்தாங்கலில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் கஞ்சா புகைத்தது கடும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறையினர் 10 ஆயிரம் கஞ்சா வணிகர்ககளை கைது செய்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், அப்படி இருந்தும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்றால் இதற்கு காவல்துறை உடந்தை என்றே தெரிகிறது.
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டும் பாசனப்பகுதிகளுக்குத் தண்ணீர் சென்று சேராததற்கு மணல் கொள்ளை தான் காரணம். காவிரி ஆற்றில் மணல் குவாரிகளை மூடவேண்டும்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களில் 19 பேரை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம், 3 பேருக்கு தலா ரூ.40 லட்சம் அபராதம் விதித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் இரு நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.
திருப்பத்தூரில் தாயும் மகளும் கந்து வட்டிக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அந்தப் பெண்ணின் கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கந்துவட்டி கொடுமைகளுக்கு கடுமையான தண்டனைகளுடன் புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் எனக் கூறினார்.