மிரட்ட காத்திருக்கும் `ஜவாத்’ புயல்.. – தமிழகத்திற்கு ஆபத்தா?

தெற்கு தாய்லாந்து மற்றும் அதனையொட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இது தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து வந்தது. இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக அது மாறியுள்ளது. நாளை (02-12-21) அது புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளது.

இந்த புயல் சின்னம் நாளை மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னத்தால் தமிழக கடலோர பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் (3-ந்தேதி) இந்த புயல் சின்னம் புயலாக மாற உள்ளது. அப்போது அதன் சீற்றம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடலில் கொந்தளிப்பு காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

3-ந்தேதி உருவாகும் புயலுக்கு “ஜாவத்” என்று பெயர் சூட்டப்பட உள்ளது. இது சவுதிஅரேபியா வழங்கிய பெயராகும். புயலுக்கான பட்டியலில் அடுத்த இந்த பெயர்தான் இடம் பெற்றுள்ளது.

ஜவாத் என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். ஜாவத் புயல் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக தொடர் மழையால் தவித்த மக்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.

3-ந்தேதி பிற்பகலுக்கு பிறகு புயல் வடக்கு திசை நோக்கி மேலும் நகரும். அதன் பிறகு அது வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோர பகுதியை நெருங்கும். அப்போது ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4-ந்தேதி (சனிக்கிழமை) ஜாவத் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் அது நகரும் திசையை பொறுத்து வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா இடையே எந்த பகுதியில் கரையை கடக்கும் என்பது தெரியவரும்.

Total
0
Shares
Related Posts