சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிறங்க சாதகமான சூழல் இல்லாவிட்டால், தரையிறங்கும் முயற்சி நிலைமை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து சந்திரயான்-3, விண்ணில் ஏவப்பட்டது. இது புவிசுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் கடந்த 5ஆம் தேதி நுழைந்தது.
ஆக.16 ஆம் தேதி இறுதி சுற்றுவட்டப் பாதையில் உயரம் வெற்றிக்கரமாக குறைக்கப்பட்டு நிலவிற்கும் சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 153 கிலோ மீட்டராகவும், அதிகபட்ச தூரம் 163 கிலோ மீட்டர் என்ற அளவில் விண்கலம் பயணித்தது.
ஆக.17 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தின் உந்து விசையிலிருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. விண்கலத்தில் இருந்து லேண்டரை பிரிக்கும் பணி பெங்களூருவில் இஸ்ரோ மையத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சரியாக மதியம் 1.15 மணிக்கு உந்து சக்தி கலனில் இருந்து பிரிந்தது விக்ரம் லேண்டர்.
ஆக.18-ஆம் தேதி விண்கலத்தில் இருந்து பிரிந்த பிறகு லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டாவது முறையாக லேண்டரின் சுற்று வட்டப்பாதை ஞாயிறு அதிகாலை 2 மணியளவில் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் சந்திராயன் 3 எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக வகுக்கப்பட்ட மாற்றத்தின் படி சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நாளை மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ள நிலையில் இதை நேரலையாக ஒளிபரப்பும் அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி, சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, லேண்டர் தொகுதியின் ஆரோக்கியம் மற்றும் நிலவில் உள்ள நிலைமைகளின் அடிப்படையில் அந்த நேரத்தில் தரையிறக்குவது சரியானதா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்போம்” என இஸ்ரோ இயக்குனர் நிலேஷ் எம். தேசாய் கூறியுள்ளார்.
மேலும் தேவையான எந்த அம்சம் சாதகமாக இல்லை என்றாலும் சந்திரனில் தரையிறங்குவது ஆகஸ்ட் 27ஆம் தேதி தள்ளிப்போகும்” என்று கூறியுள்ளார்.