பள்ளி மாணவர்களுக்கு NCVT சான்றிதழுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சென்னை பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் சிறக்க NCVT சான்றிதழ் உடன் கூடிய தொழிற்பயிற்சி பல்வேறு தொழிற்பாடப் பிரிவுகளில் அளிக்கப்படுகிறது.
அதாவது, கணினி இயக்குபவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர், குழாய் பொருத்துநர், கம்மியர் மோட்டார் வாகனம், மின் பணியாளர், எலக்ட்ரானிக் மெக்கானிக் ஆகிய தொழிற் பாடப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.
எனவே இந்த படிப்புகளுக்கு, சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், சென்னை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளித்து, மீதி காலியாக உள்ள இடங்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவர்களை அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கை வழங்கப்படும். இந்த பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.
பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தின் சிறப்பு அம்சமானது முற்றிலும் இலவச பயிற்சி அளித்து ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படுகிறது.
படிக்கும் போது தகுதியுடைய மாணவர்களுக்கு ஒரு மாதம் ரூ.5,000 முதல் ரூ.10,500 வரை சம்பளத்துடன் கூடிய பயிற்சி (internship training) தொழிற்சாலைகளில் அளிக்கப்படுகிறது.
இதையும் படிங்க : சுதந்திர தினத்தில் 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் – தமிழக அரசு!!
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விலையில்லா நலத் திட்டங்களான இரண்டு செட் சீருடை, பஸ் பாஸ், பாடப்புத்தகம் மற்றும் வரைபடக்கருவிகள், பாதுகாப்பு காலணி, இருசக்கர மிதிவண்டி, பயிற்சி நேர இடைவெளியில் காலை, மாலை இருவேளை தேநீர், பிஸ்கட், மதிய உணவு மற்றும் பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.750 பயிற்சி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
2024-2025ம் கல்வி ஆண்டிற்கு தொழிற் பயிற்சியில் சேர விண்ணப்பப் படிவத்தை சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவசமாக பெறலாம் அல்லது இணையதள முகவரி www.chennaicorporation.gov.in மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையம், முத்தையா தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, ஐஸ் அவுஸ், ராயப்பேட்டை, சென்னை-14 என்ற முகவரியில் நேரடியாக சமர்ப்பித்து சேர்க்கையை பெறலாம்.
சேர்க்கைக்கான கடைசி நாள் வரும் 31ம்தேதி. மேலும், மாணவர்கள் பயிற்சியில் சேரும்போது அசல் சான்றிதழ்களான பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும்.” எனக் கூறப்பட்டுள்ளது.