சென்னை சட்டக்கல்லூரி மாணவரை தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்பட 9 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வியாசர்பாடி அருகே உள்ள புது நகர் பகுதியை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு சட்டப்படிப்பு படித்து வருகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாலும் குடும்ப சூழ்நிலை கருதி இரவு நேரங்களில் கடைகளில் பகுதி நேர வேலையும் செய்து வந்திருக்கிறார்.
தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தத போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சாலையில் நடமாடும் போது முககவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் கட்டுமாறு கூறியதாகவும், அதற்கு தான் முகக்கவசம் அணிந்து தான் வந்துள்ளேன்.அதனால் அபராதம் கட்ட முடியாது என கூறியதாகவும் இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது.
வாக்குவாதம் முற்றியதில் காவலரை அடிக்க முயன்றதாக கூறி அவரை காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்று இரவு ஒரு மணியிலிருந்து காலை 11 மணி வரை போலீசார் தன்னை அடித்து தாக்கியதுடன் தனது உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி, தகாத வார்த்தைகளால் பேசி தனது முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் ரஹீம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிதிருந்தார்.
மாணவர் தாக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், லீசாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்தது.
இந்த நிலையில் சென்னை சட்டக்கல்லூரி மாணவரை தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்பட 9 போலீசார் மீது கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசமாக திட்டுதல், பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.